சிலி நிலநடுக்கம் பூமியின் அச்சை மாற்றியிருக்கலாம்: நாசா விஞ்ஞானி அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மார்ச்சு 3, 2010


அண்மையில் சிலியில் எழுநூறுக்கும் அதிகமானோரைக் கொன்று குவித்த 8.8 நிலநடுக்கம் பூமியின் அச்சை இடம்பெயர வைத்திருக்கலாம் என்றும், இந்த இடம்பெயர்வு பூமி தன்னைத் தானே சுழலும் ஒரு நாளின் அளவைக் குறைக்கும் எனவும் நாசாவின் அறிவியலாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.


பூமியின் அச்சு

கலிபோர்னியாவைச் சேர்ந்த ரிச்சார்ட் குரொஸ் என்ற நாசா அறிவியலாளர் பூமியின் சுழற்சியானது நிலநடுக்கத்தால் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை ஆராய்ந்து, ஒரு நாள் கிட்டத்தட்ட 1.26 மைக்குரோசெக்கன்களால் குறைந்திருப்பதாக கணக்கிட்டிருக்கிறார்.


புளூம்பேர்க் செய்தித்தளத்துக்கு மின்னஞ்சல் மூலம் அவர் அனுப்பிய செய்தியில், "பூமியின் திணிவை சமநிலையில் வைத்திருக்கும் அச்சு 2.7 மில்லிஆர்க்செக்கன்களால் (2.7 milliarcseconds, கிட்டத்தட்ட 8 செமீ அல்லது 3 அங்) இடம்பெயர்ந்திருக்கிறது," எனத் தெரிவித்திருக்கிறார்.


2004 ஆம் ஆண்டில் சுமாத்திராவில் இடம்பெற்ற 9.1 நிலநடுக்கத்துடன் சிலியின் நிலநடுக்கத்தை குரொஸ் ஒப்பிட்டிருக்கிறார். அவரின் கணிப்பின் படி, 2004ம் ஆண்டில் ஒரு நாள் 6.8 மைக்குரோசெக்கன்களினால் குறைந்திருக்கிறது என்கிறார்.


சுமாத்திராவின் நிலநடுக்க அளவு அதிக அளவாயிருந்தாலும், சிலி நிலநடுக்கம் சுமத்ரா நிலநடுக்கத்தை விட பூமியின் அச்சை அதிக தூரம் இடம்பெயர வைத்திருக்கிறது. சிலி பூமியின் நடு-அகலக்கோட்டிற்கு அருகே காணப்படுவதால், பூமியின் அச்சைப் பலமாக மாற்றியிருக்கிறது என ரிச்சார்ட் குரொஸ் தெரிவித்தார்.


ஸ்கொட்லாந்தில் உள்ள பிரித்தானிய நிலவியல் ஆய்வு மையத்தின் அறிவியலாளர் டேவிட் கெரிட்ச் நிலநடுக்கம் எவ்வறு பூமியின் அச்சை இடம்பெயர்க்கிறது என விவரித்தார். பனிக்கட்டி மீது விளையாடும் ஒருவர் தன்னைத் தானே சுழலும் போது தனது கைகளை மடக்கி நீட்டும் போது அவரின் சுழற்சி வீதம் அதிகரிக்கிறது. "அவ்வாறே பூமியும் தன்னைத் தானே சுழலுகிறது. நிலநடுக்கத்தினால் அதன் திணிவு மையம் மாறும் போது சுழற்சி வீதம் மாறுகிறது," என கெரிட்ச் புளூம்பேர்க் செய்தியாளருக்குத் தெரிவித்தார்.

மூலம்