மாலியில் உள்ள இசுலாமியத் துறவியின் கல்லறை தீவிரவாதிகளால் சேதம்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மே 7, 2012

மாலியின் திம்புக்து நகரில் அமைந்துள்ள இசுலாமியத் துறவி ஒருவரின் கல்லறை ஒன்று அல்-கைதாவுடன் தொடர்புடைய இசுலாமியத் தீவிரவாதக் குழு அழித்துச் சேதப்படுத்தியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகளும் மக்களும் தெரிவித்துள்ளனர். இசுலாமுக்கு விரோதமானது எனக் கூறி கல்லறைக்கு ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் தீ வைத்துக் கொளுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.


திம்புக்து நகரில் உள்ள மசூதி

மாலியில் அண்மையில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து ஐக்கிய நாடுகளால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ள திம்புக்து நகரை துவாரெக் போராளிகளும் இசுலாமியத் தீவிரவாதிகளும் இராணுவத்திடம் இருந்து கைப்பற்றியிருந்தனர். திம்புக்து நகரம் பண்டைய கட்டிடக் கலைக்குப் பேர் போனது. தீவிரவாதிகளால் இந்நகரத்தின் பழமைக்கு மிகவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக யுனெஸ்கோ நிறுவனம் கூறியுள்ளது.


சித்தி முகமது பென் அமர் என்பவரின் கல்லறைக்குச் சென்று வழிபாடு நடத்துபவர்களை தீவிரவாதிகள் எச்சரித்து வந்துள்ளனர் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். "இறந்தவரை வழிபட்டு உதவி கேட்பதை விடுத்து இறைவனிடம் உதவி கேளுங்கள்," என அவர்கள் மக்களிடம் தெரிவித்துள்ளனர். ஏனைய கல்லறைகளையும் அவர்கள் அழித்து விடவிருப்பதாகப் பயமுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


திம்புக்துவில் 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று பெரும் மசூதிகளும், 16 கல்லறைகளும் காணப்படுவதாக யுனெஸ்கோ கூறியுள்ளது.


மூலம்[தொகு]