உள்ளடக்கத்துக்குச் செல்

அல் கைடா தலைவர் உசாமா பின் லாதின் கொல்லப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மே 2, 2011

அல் கைடா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் உசாமா பின் லாதின் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா வெள்ளைமாளிகையில் நேற்றிரவு அதிகாரபூர்வமாக அறிவித்தார்.


பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்க உயர் ராணுவ நடவடிக்கைக் குழு அதிகாரி ஒருவர் இது குறித்துக் கூறும் போது, "பின் லாதின் பாக்கித்தானில் அபட்டாபாத் என்ற இடத்தில் நடைபெற்ற தரைவழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். கடந்த வாரமே இது நிகழ்ந்துவிட்டது. இருப்பினும் உறுதிப்படுத்துவதற்காகக் காத்திருந்தோம்," என்று அவர் தெரிவித்தார். இவரது உடலை டி.என்.ஏ. சோதனை மூலம் ஒசாமாதான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஞாயிற்றுக்கிழமை அன்று இசுலாமாபாத் நகரில் இருந்து 100 கிமீ வடகிழக்கு நகரான அபட்டாபாத் நகரில் அமெரிக்கப் படையினரின் ஒரு சிறு குழு தாக்குதலை நடத்தியது. "அமெரிக்கர்கள் எவரும் இத்தாக்குதலில் உயிரிழக்கவில்லை" என பராக் ஒபாமா தெரிவித்தார். 40 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இத்திடீர்த் தாக்குதலில் பின் லாதின் தவிர அவரது ஒரு மகனும், மேலும் இருவரும் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்பட்ட பெண் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். வேறும் இரண்டு பெண்கள் காயமடைந்தனர்.


பின் லாதினின் மிக நெருங்கிய ஒருவரை கடந்த பல ஆண்டுகளாகத் தாம் உளவு பார்த்ததாகத் தெரிவித்த அமெரிக்க அதிகாரி ஒருவர், பின் லாதினின் இருப்பிடமான அபாட்டபாத்தைக் கடந்த ஆண்டு ஆகத்து மாதத்தில் அடையாளம் கண்டுபிடித்ததாகவும் தெரிவித்தார்.


அமெரிக்காவின் மீது 2001 செப்டம்பர் 11ம் தேதி நடத்தப்பட்ட இரட்டைக் கோபுரத் தாக்குதல், மற்றும் 2002 பாலிக் குண்டுவெடிப்புகள் உட்படப் பல்வேறு தாக்குதல்களுக்கு காரணகர்த்தாவாக, சர்வதேசத் தீவிரவாதியாக பின் லாதின் அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டவர்.


கடந்த 2001ஆம் ஆண்டுத் தாக்குதலுக்குப் பிறகு பின் லாதினைப் பிடிக்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது. அவர் பாக்கித்தான் - ஆப்கானித்தான் மலைப் பகுதியில் பதுங்கியிருப்பதாகத் தெரியவந்ததும், அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டது. ஆனால், இதுவரை அவர் பிடிபடவில்லை. தற்போது வெளியாகியுள்ள செய்தி, அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும், அமெரிக்க தேசிய பாதுகாப்புக் குழுவுக்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகவும் ஆறுதலாகவும் இருக்கும் என்று கருதப்படுகிறது. அண்மைக் காலமாக அமெரிக்க மக்களிடையே சிறிது சிறிதாகச் சரிந்துவரும் அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு, இந்த அறிவிப்பின் மூலம் சற்றே நிமிரக்கூடும் என்று தெரிகிறது.


மூலம்

[தொகு]