உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கைப் போர்க்குற்றம் குறித்த சேனல் 4 காணொளிகள் உண்மையானவை - ஐநா சிறப்புத் தூதர்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மே 31, 2011

இலங்கையில் இடம்பெற்ற ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் குறித்த முக்கிய ஆவணமாகக் சித்தரிக்கப்படும் சேனல் 4 காணொளி ஆதாரங்கள் உண்மையானவை என்று ஐக்கிய நாடுகளின் சிறப்புத் தூதர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சட்டப் பேராசிரியர் கிறிஸ்டோப் ஹெய்ன்ஸ் கூறியுள்ளார். ஆனாலும், இந்தக் காணொலிகள் பொய்யானது என்றும் மாற்றம் செய்ய்ப்பட்டது என்றும் இலங்கை அரசு நிராகரித்திருந்தது.


இலங்கையில் போர் குற்றங்கள் நடைபெற்றுள்ளதாகவும் இதை ஆராய சுயாதீன பன்னாட்டு விசாரணைக் குழு தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுக் கூட்டம் நேற்றுத் துவங்கிய நிலையில், இந்த கருத்து வெளியாகியுள்ளதால், இலங்கை அரசுக்கு மேலும் நெருக்கடி உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நிராயுதபாணிகளாக இருந்தவர்களை இலங்கைப் படையினர் சுட்டுக் கொல்வதுபோல காட்டும் ஒரு வீடியோவை பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சி பல மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பியது. இது குறித்து கிறிஸ்டோப் ஹெய்ன்ஸ் நேற்று ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் கூறும் போது, "சேனல்-4" வெளியிட்ட காணொளிகளில் பதிவானவை அனைத்தும் உண்மை. அவை தொழில்நுட்ப மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம் ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டு அனைத்தும் உண்மை என்று உறுதியானது. நடந்ததை நடந்தபடி அந்தக் காட்சிகள் காட்டுகின்றன,” என்றார்.


இலங்கைப் போர்க் குற்றம் குறித்து விசாரிக்க வேண்டும் என்ற குரல் எழும் போதெல்லாம், மொத்தம் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஐ.நா., மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம் பெற்றுள்ள ஆப்பிரிக்க மற்றும் இசுலாமிய நாடுகளின் பிரதிநிதிகள் மட்டும் இலங்கை அரசுக்கு ஆதரவாக பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

மூலம்

[தொகு]