ஈழப்போர்: 'தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்' ஆவணப் படத்தை சேனல் 4 வெளியிட்டது
- 9 ஏப்பிரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது
- 9 ஏப்பிரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
- 9 ஏப்பிரல் 2015: சிறை விதிக்கப்பட்ட திசைநாயகத்துக்கு 2 பன்னாட்டு விருதுகள்
- 6 ஆகத்து 2014: இலங்கை அரசு நியமித்த நிபுணர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்படுகிறது
- 2 ஆகத்து 2014: 157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்
வெள்ளி, மார்ச்சு 16, 2012
நான்காம் ஈழப்போர் குறித்த பிரித்தானியாவின் சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் 'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" என்னும் காணொளி நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இது "சேனல் 4" சென்ற ஆண்டு வெளியிட்ட "சிறிலங்காவின் கொலைக்களங்கள்" ஆவணப்படத்தின் இரண்டாவது பாகம் ஆகும். தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்னும் காணொளி ஒரு மணித்தியால ஆவணப்படமாக தொகுக்கப்பட்டுள்ளது.
முதலாவது ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்ட போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரையில் எந்தவிதமான விசாரணைகளும் நடத்தப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ள இந்தக் காணொளியில் போர்க் குற்றங்களுக்கான மேலும் ஆதாரங்களைத் தான் வெளியிடுவதாகக் குறிப்பிடுகிறது. இக் காணொளியில் இறுதிக் கட்டப் போரின் போது நடைபெற்றதாக கூறப்படும் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், போர்குற்றங்கள் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது உள்ளிட்ட காட்சிகளும் இடம் பெற்றுள்ளன
மிகத் தெளிவான நான்கு சம்பவங்களின் அடிப்படையில் இலங்கை அரச படைகள் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் இந்த ஆவணப்படத்தில் ஆராயப்பட்டுள்ளன. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஆகியோரே போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் என்று இந்த ஆவணப்படத்தின் மூலம் "சனல் 4" தொலைக்காட்சி நிறுவுகிறது.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதரகத்தினைச் சேர்ந்த சர்வதேசப் பணியாளர்கள் இருவரை உள்ளடக்கிய குழு உடையார்கட்டுப் பகுதியில் 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் திகதி தற்காலிக தங்கிடம் ஒன்றை அமைக்க முயற்சித்துக் கொண்டிருந்த சம்பவத்துடன் இந்த ஆவணப்படம் போர்க் குற்றங்களை ஆராயத் தொடங்குகிறது.
இலங்கை அரசு கூறியது போன்று இல்லாமல் தாக்குதல் தவிர்ப்பு வலயங்கள் மீது இலங்கை இராணுவத்தினர் தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டனர் என்கிற முதலாவது போர்க் குற்றச்சாட்டை ஆவணப்படம் முன்வைக்கிறது. போர் வலயத்துக்குள் அகப்பட்ட மக்களின் எண்ணிக்கையை வேண்டும் என்றே குறைத்துக் காட்டி, உண்மையான மக்கள் எண்ணிக்கைக்கு வேண்டிய உணவு மற்றும் மருந்துப் பொருள்களை அனுப்பி வைக்காமல் தடையை ஏற்படுத்தியமை அரசின் இரண்டாவது போர்க் குற்றம் என்றும் நிறுவப்படுகிறது.
போரின் இறுதி நாட்களில் கனரக ஆயுதங்களை இலங்கை இராணுவம் பயன்படுத்தியது என்றும் தாக்குதல் தவிர்ப்பு வலயங்கள் மீது கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் ஆதாரங்களுடன் இந்த ஆவணப்படம் நிறுவியுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மூன்றாவது மகன் பாலச்சந்திரன் (12 வயது) சரணடைந்த பின்னர் உளவியல் ரீதியாகக் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதாக ஆவணப்படம் நிரூபிக்கிறது.
இந்தப் படத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்குப் பின்னராவது இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்களுக்கு நீதி கிடைக்குமா என்று கேள்வி எழுப்புவதுடன் காணொளி நிறைவு பெறுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பில் பன்னாட்டு சுயாதீன விசாரணைப் பொறிமுறையொன்றின் அவசியத்தை வலியுறுத்தி வரும் தமிழர் தரப்பின் இராசதந்திரச் செயற்பாடுகளுக்கு, சேனல்-4 தொலைக்காட்சியின் புதிய ஆவணபடம் வலுச்சேர்த்துள்ளது என ஐ.நா மனித உரிமைச் சபை விவகாரங்களுக்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வள அறிஞர் குழுவினர், ஜெனீவாவில் இருந்து தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், மனித உரிமைகள் மீறல் தொடர்பான சகல குற்றச்சாட்டுக்களையும் பாதுகாப்பு அமைச்சு நிராகரிக்கிறது என இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்சுமன் உலுகல்ல விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இறுதிப்போரின் போது நடந்ததாகக் கூறப்படும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் மனித உரிமைகள் என்பன தொடர்பாக சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள ‘இலங்கையின் கொலைக்களங்கள் 2’ எனும் வீடியோ காட்சிக்கு பதிலளிக்கும் வகையில், இலங்கை அரசாங்கம் உண்மையான புதிய காணொளியை வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்
[தொகு]- சிறிலங்காவின் கொலைக்களங்கள்\" பாகம் - 2 வெளியீடு. நேற்றிரவு வரை இணையத்தில் 50000 பேர் பார்வை, உதயன், மார்ச் 16, 2012
- 'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள், சேனல் 4
- இலங்கைக்கு அவப்பெயர் ஏற்படுத்த ‘சனல் - 4’ மற்றொரு வீடியோ, தினகரன், மார்ச் 16, 2012
- Can Sri Lanka achieve reconciliation?, அல்ஜசீரா, மார்ச் 16, 2012