உள்ளடக்கத்துக்குச் செல்

சரத் பொன்சேகாவுக்கு எதிராக இலங்கை இராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஆகத்து 13, 2010

இலங்கையின் முன்னாள் இராணுவத் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்தபோதே அரசியலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை மூன்று பேரடங்கிய இராணுவ நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தித் தீர்ப்பளித்தது. இதனடிப்படையில் அவர் இராணுவ சட்டங்களின்படி அபகீர்த்தி கொண்ட குற்றவாளியாக இனம் காணப்பட்டுள்ளார்.


ஜெனரல் சரத் பொன்சேகா

இத்தீர்ப்பை அடுத்து சரத் பொன்சேகாவின் பதக்கங்கள் பறிக்கப்பட்டு, ஜெனரல் என்ற அவரது இராணுவப் படிநிலை அந்தஸ்தும் பறிக்கப்படும் என்று உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக அரசுத் தலைவர் மகிந்த ராசபக்சவின் ஒப்புதல் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அரசுத்தலைவரின் இறுதி முடிவிற்கு அமையவே இந்த தீர்ப்பு செயல்படும் என ராணுவ நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.


கடந்த ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் இராணுவத்தினர் பெற்ற வெற்றியில் முக்கியப் பங்காற்றியவர் சரத் பொன்சேகா என்பது குறிப்பிடத்தக்கது.


ஆனால் அந்த வெற்றிக்குப் பின்னர் இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவுடன் இவருக்கு தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர் அவரை எதிர்த்து அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு சரத் பொன்சேகா தோல்வியடைந்தார். பின்னர் நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எதிர்க்கட்சி உறுப்பினர் ஆனார்.


பொன்செகாவிற்கு எதிராக வேறு குற்றச்சாட்டுகளுடன் இராணுவ நீதிமன்றத்தில் வேறொரு வழக்கும் சிவில் நீதிமன்றத்தில் மூன்று வழக்குகளும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. சரத் பொன்சேகாவுக்கு சார்பாக வழக்குரைஞர்கள் வாதிட முன்பதாகவே இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புள்ள செய்திகள்

மூலம்