உள்ளடக்கத்துக்குச் செல்

சுமாத்திராவில் 7.7 அளவு நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், அக்டோபர் 27, 2010

இந்தோனேசியாவின் சுமாத்திராப் பகுதியில் 7.7 அளவு நிலநடுக்கம் நேற்று திங்கட்கிழமை உள்ளூர் நேரம் இரவு 09:42மணிக்கு இடம்பெற்றது. இந்நிலநடுக்கத்தை அடுத்து மேற்கு இந்தோனேசியாவின் சில தீவுகளில் 3 மீட்டர் உயரத்துக்கு ஆழிபேரலை ஏற்பட்டதில் பல கிராமங்கள் சேதமடைந்தன. குறைந்தது 154 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சுமாத்திரா நிலநடுக்கம்

இந்நிலநடுக்கம் சுமாத்திராவில், மெண்டவாய் தீவுகளில் உள்ள தெற்கு பெகாய் தீவில் இருந்து 78 கிமீ தூரத்தில் 20.6 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க நிலவியல் கணிப்பு மையம் அறிவித்தது. ஆழிப்பேரலை காரணமாக பலர் காணாமல் போயுள்ளனர்.


சிங்கப்பூர் வரை இந்நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் ஆனால் அங்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.


பெட்டு மொங்கா என்ற இடத்தில் சுனாமி தாக்கியதில் அனேகமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரி தெரிவித்தார். “200 பேர் வசிக்கும் இக்கிராமத்தில் 40 பேர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள், பெண்கள் உட்பட 160 பேரைக் காணவில்லை,” என அவர் தெரிவித்தார்.


மென்டவாய் தீவுகள் கடலலை சறுக்கு விளையாட்டுக்குப் பேர் போனது. சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த 9 ஆஸ்திரேலியர்கள் காணாமல் போனதாக ஆத்திரேலிய அரசு அறிவித்தது. எனினும் அவர்கள் அனைவரும் கரை மீண்டுள்ளதாகப் பின்னர் அறிவித்தது.


மூலம்

[தொகு]
விக்கிப்பீடியா
விக்கிப்பீடியா
அக்டோபர் 2010 சுமாத்திரா நிலநடுக்கம் பற்றிய கட்டுரை விக்கிப்பீடியாவில் உள்ளது.