செனிகலில் பெரும் பணச்செலவில் அமைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சிலை திறப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஏப்பிரல் 4, 2010

மேற்கு ஆப்பிரிக்காவின் செனிகல் நாட்டில் அந்த நாட்டின் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கும் மத்தியில், 27 மில்லியன் அமெரிக்க டாலர் பொருட்செலவில் அமைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய மிகப்பெரும் விடுதலைச் சிலை ஒன்று நேற்றுத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய அமெரிக்காவின் விடுதலைச் சிலையை விட இச்சிலை பெரியதாகும். வெண்கலத்தினால் ஆன இந்த சிலை 49 மீட்டர் (160 அடி) உயரமானது. செனிகல் தலைநகர் டாக்காரில் ஆப்பிரிக்க எழுச்சி எனப்படும் அந்நாட்டின் 50வது விடுதலை நாளை நினைவுகூரும் முகமாக செதுக்கப்பட்டுள்ளது.


சோவியத் பாணியில் வட கொரியத் தொழிலாளர்களால் அமைக்கப்பட்ட இந்தச் சிலைக்கான செலவு ஒரு வீண்விரையம் என்றும், அந்தச் சிலை இசுலாத்துக்கு முரணானது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அத்துடன் அது பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் இருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.


செனிகலின் முன்னணிக் கட்டிடக் கலைஞரும், அரசுத் தலைவரின் ஆலோசகருமான பியர் குஜாபி அடேபாட்டினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இச்சிலையில் மூன்று உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மனிதன் ஒருவன் ஒரு கையில் குழந்தை ஒன்றைத் தூக்கிப் பிடித்தவாறும், அவனது மற்றைய கை இளம் பெண் ஒருத்தியின் கையைப் பிடித்துக் கொண்டிருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


சிலை திறப்பு விழாவில் 19 ஆப்பிரிக்க நாடுகளின் அரசுத் தலைவர்கள், வடகொரிய அரசு அதிகாரிகள், வண. ஜெசி ஜாக்சன் உட்பட நூற்றுக்கும் அதிகமான ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர்.


சிலையின் அருகே அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுக்களில் நூற்றுக்கும் அதிகமானோர் ஆளும் செனிகல் மக்களாட்சிக் கட்சியின் மஞ்சள், நீல நிறப் புடவைகள் அணிந்து வரிசையாக நின்றிருந்தனர்.


நாட்டின் அரைவாசிக்கும் அதிகமானோர் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் செனிகல் நாட்டில் இச்சிலை குறித்து பல வித அபிப்பிராயங்கள் நிலவுகின்றன.


இந்த சிலை திறக்கப்படுவதை கண்டிக்கும் வகையில் நேற்று தடையையும் மீறி எதிர்க்கட்சிகளின் கூட்டணி போராட்டப் பேரணி ஒன்றை நடத்தியது.


உலகின் அனைத்து கட்டிட நிர்மாணங்களும் சர்ச்சைக்குள்ளாகின்றன - பாரிசில் உள்ள ஈபெல் கோபுரத்தைப் பாருங்கள்.

—செனட்டர் அகமது பசீர் கவுண்டா

இச்சிலை அமைக்கும் யோசனை தனதே என்று உரிமை கொண்டாடும் அரசுத்தலைவர் அப்துலாயி வேட், இச்சிலையினால் வரும் வருமானத்தின் 35 விழுக்காடு தனக்கே வர வேண்டும் எனக் கூறியது பலரது கண்டனத்துக்கும் உள்ளானது.


83 வயதாகும் அரசுத்தலைவர் 2012 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அவர் இச்சிலையை இயேசு கிறித்துவுடன் ஒப்பிட்டமைக்காக கிறித்தவ மதத் தலைவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியதாகிவிட்டது.


”உலகின் அனைத்து கட்டிட நிர்மாணங்களும் சர்ச்சைக்குள்ளாகின்றன - பாரிசில் உள்ள ஈபெல் கோபுரத்தைப் பாருங்கள்,” என்றார் செனட்டர் அகமது பசீர் கவுண்டா.

மூலம்[தொகு]