திண்டுக்கல் அறிவியல் திருவிழா 2026
திண்டுக்கல் அறிவியல் திருவிழா 2026 (Dindigul Science Festival 2026) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள திண்டுக்கல் நகரத்தில் 2026 ஆம் ஆண்டு சனவரி மாதம் 28 முதல் பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது.[1][2][3] [4]திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் பேராசிரியர் எசு. எசு. நாகராசன் நினைவு அறக்கட்டளை மற்றும் கார்டெக் நிறுவனம் ஆகியவை இணைந்து இத்திருவிழாவை நடத்தின. அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026 என்ற பெயரில் எம்.எசு.பி. பள்ளி அரங்கத்தில் இத்திருவிழா நடைபெற்றது. கண்காட்சி நாள்தோறும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெற்றது.
இசுரோவின் நடமாடும் விண்வெளிக் கண்காட்சி பேருந்து அனைவரின் பார்வைக்கும் காட்சிப்படுத்தப்பட்டது. திருவிழா நடைபெற்ற வளாகத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 120 அரங்குகள், பள்ளி மாணவ-மாணவியரின் 240 அறிவியல் படைப்புகள், சூரிய ஆய்வகம், கோளரங்கம், தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் புதுமைகள் குறித்த கருத்தரங்க நிகழ்ச்சிகள், அறிவியல் அறிஞர்களின் சிறப்புரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நோக்கம்
மாணவர்கள், புதுமைப் படைப்பாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம் ஆகியவற்றை வளர்ப்பதும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்படும் புதுமைகளைக் கொண்டாடும் வகையில், பள்ளிகள், கல்லூரிகள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி ஆர்வலர்களை ஒரே மேடையில் ஒன்றிணைப்பதும், கல்வித்துறை, தொழில் துறை மற்றும் சமூகத்திற்கு இடையேயான பிணைப்பை வலுப்படுத்தி இளம் மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை உண்டாக்குவதும் இத்திருவிழாவின் நோக்கங்களாகும்.
தொடக்க விழா
திண்டுக்கல் அறிவியல் திருவிழா 2026 நிகழ்ச்சியின் தொடக்க விழா, 2026 ஆம் ஆண்டு சனவரி மாதம் 28 ஆம் தேதியன்று காலையில் தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர் லியோனியால் தொடங்கி வைக்கப்பட்டது. [5] மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் கார்டெக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மாறன் விழாவின் திட்ட இயக்குநர் மனோகரன் மற்றும் பலர் தொடக்க விழாவில் கலந்துகொண்டு அரங்குகளை பார்வையிட்டனர்.[6]
புத்தாக்கத் திருவிழா செயல்பாடுகள்
- 120 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட அறிவியல் காட்சி அரங்கங்கள்.
- பள்ளி மாணவ-மாணவியரின் 240 அறிவியல் படைப்புகள்
- இயந்திரவியல் காட்சிகள்
- செயற்கை நுண்ணறிவு, சுரும்பூர்தி (ட்ரோன்)
- இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் செயல்பாடுகளை விளக்கும் பேருந்து
- சூரிய ஆய்வகம்
- கோளரங்கம்
- தினமும் மாலை நேரங்களில் அறிவியல் அறிஞர்களின் உரை
- அறிவியல் வேடிக்கை விளையாட்டுகள்
- மாணவர்களுக்கான வினாடி-வினா
- மாலை நேரங்களில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்
நிறைவு விழா
அறிவியல் திருவிழாவின் இறுதி நாளான பிப்ரவரி 03 ஆம் தேதியன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேசு பொய்யா மொழி வருகை தந்து பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு அவர்களிடம் உரையாடினார். பின்னர் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொடக்கநிலை வணிக நிறுவனங்களின் அரங்குகளை பார்வையிட்டு விழாவில் சிறப்புரையும் ஆற்றினார். மாலையில் விழாவின் இறுதி நிகழ்வாக சிறந்த கண்டுபிடிப்புகளை உருவாக்கியிருந்த பள்ளி கல்லூரி பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ரொக்க பரிசுகளையும் கேடயங்களையும் வழங்கினர்.[7][8]
மேற்கோள்கள்
- ↑ வார்ப்புரு:Cite news
- ↑ வார்ப்புரு:Cite news
- ↑ வார்ப்புரு:Cite web
- ↑ வார்ப்புரு:Cite news
- ↑ வார்ப்புரு:Cite news
- ↑ https://www.thehindu.com/news/cities/Madurai/week-long-science-technology-and-startup-innovation-fest-begins-in-dindigul/article70562375.ece
- ↑ வார்ப்புரு:Cite news
- ↑ வார்ப்புரு:Cite news
தகவல்: தமிழ் விக்கிபீடியா பயனர் தில்லி பாபு