உள்ளடக்கத்துக்குச் செல்

தென்-வட கொரியாவில் பிரிந்து வாழும் குடும்பத்தினர் சந்திப்பது பற்றி உடன்பாடு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஆகத்து 28, 2009, சியோல், தென் கொரியா:


தென் மற்றும் வட கொரியாக்களில் பிரிந்து வாழும் குடும்பத்தினர் சந்திப்பது பற்றி, தென்-வடகொரிய செஞ்சிலுவைச் சங்கங்கள் இன்று வெள்ளிக்கிழமை வடகொரியாவின் கும்காங் மலை பிரதேசத்தில் உடன்படிக்கையில் கையொப்பமிட்டன. தொடர்புடைய சந்திப்பு நடவடிக்கை, இவ்வாண்டின் செப்டம்பர் 26ம் நாள் முதல் அக்டோபர் முதல் நாள் வரை கும்காங் மலை பிரதேசத்தில் நடைபெறும் என்று இரு தரப்பும் அறிவித்தன.


இரு கொரியாக்களும் 2007 ஆம் ஆண்டில் உறவினர்கள் சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தன. ஆனால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நிறுத்தப்பட்டது. இப்போது இரு நாட்டு உறவு மேம்பட வட கொரியத் தலைவர் கிம் ஜோங் இல் தீர்மானித்ததைத் தொடர்ந்து இரு நாட்டுப் பேராளர்களின் சந்திப்பு இடம் பெற்றுள்ளது.


உடன்படிக்கையின் படி, பிரிந்து வாழும் குடும்பத்தினரை சேர்ந்த 100பேர் இடம்பெறும் பிரதிநிதிக் குழுவை இரு தரப்பும் முறையே உருவாக்கும். செப்டம்பர் 26முதல் 28ம் நாள் வரை, தென்கொரிய பிரதிநிதிக்குழுவினர் கும்காங் மலை பிரதேசத்துக்குச் சென்று, வடகொரியாவின் 200க்கு அதிகமான உறவினர்களை சந்திப்பர். செப்டம்பர் 29முதல் அக்டோபர் முதல் நாள் வரை, வடகொரிய பிரதிநிதிக் குழுவினர் தென்கொரியாவின் சுமார் 450 உறவினர்களைச் சந்திப்பர். கும்காங் மலை பிரிந்து வாழும் குடும்பத்தினர் சந்திக்கும் வகையில், கடந்த ஆண்டின் ஜுலையில் கட்டியமைக்கப்பட்ட இடம், இந்த முறையும் சந்திக்கும் இடமாக அமையும்.

மூலம்

[தொகு]