உள்ளடக்கத்துக்குச் செல்

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் போராளிகள் போர் நிறுத்தத்திற்கு இணக்கம்

விக்கிசெய்தி இலிருந்து
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் இருந்து ஏனைய செய்திகள்
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அமைவிடம்

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

சனி, சனவரி 12, 2013

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் அரசுடன் போரில் ஈடுபட்டிருக்கும் போராளிகள் காபொன் நாட்டில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளனர்.


நாட்டில் கூட்டு அரசு ஒன்றை அமைப்பதற்கு போராளிகளும் அரசுத்தலைவரும் உடன்பட்டுள்ளனர் என்றும், இக்கூட்டரசு இன்று சனிக்கிழமை உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


கடந்த மாத ஆரம்பத்தில் செலெக்கா போராளிகள் கூட்டணி மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் வடக்கு, மற்றும் கிழக்குப் பகுதிகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர். முன்னர் செய்துகொண்ட அமைதி உடன்படிக்கைகளை அரசுத்தலைவர் பிரான்சுவா பொசீசே மீறி விட்டார் எனப் போராளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.


நேற்றைய உடன்பாட்டின் படி, நாட்டின் தேசியப் பேரவை (நாடாளுமன்றம்) கலைக்கப்படும் என்றும், 12 மாதங்களில் புதிய தேர்தல்கள் நடைபெறும் வரை எதிர்க்கட்சியில் இருந்து பிரதமர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூக உறுப்பினர்கள், மற்றும் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுக்கான ஐநா சிறப்புப் பிரதிநிதி மாகரெட் வோட் ஆகியோரின் முன்னிலையில் புதிய உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.


சனாதிபதி பொசீசே அவரது பதவிக்கால 2016 இல் முடியும் வரை அப்பதவியில் தொடர்ந்து இருப்பார். எதிர்க்கட்சிகள் தேர்ந்தெடுக்கும் புதிய பிரதமருக்கு அடுத்த 12 மாதங்களுக்கு அரசாட்சி அமைக்க அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும். புதிய இடைக்கால அரசை நீக்கும் அதிகாரம் சனாதிபதிக்குக் கிடையாது. பிரதமரே அரசுத்தலைவராகவும் இருப்பார்.


2003 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து பொசீசே அரசுத்தலைவரானார்.


மூலம்

[தொகு]