உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசியாவில் ஆர்ப்பாட்டக்காரகள் மீது காவல்துறையினர் கண்ணீர்க் குண்டுகளை வீசினர்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஏப்பிரல் 28, 2012

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டம் ஒன்றைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினர். நாட்டில் தேர்தல் முறைகளில் மாற்றம் வேண்டி பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


பிரதமர் நஜீப் ரசாக்கின் ஆளும் கூட்டணிக் கட்சி எதிர்வரும் தேர்தலில் தற்போதைய தேர்தல் முறையால் பெரிதும் பயனடையும் என எதிர்க்கட்சியினர் நம்புகின்றனர். அண்மைக்காலத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் இது மிகப் பெரிதாகும் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. குறைந்தது 20 பேர் கைது செய்யப்பட்டனர்.


இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 25,000 பேர் வரை கலந்து கொண்டதாகக் காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார். ஆனால் 80,000 பேர் வரையில் கலந்து கொண்டதாக சில மலேசிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


எதிர்க்கட்சியின் ஆதரவுடன் பேர்சி என்ற அமைப்பு இந்தப் பேரணியை ஒழுங்கு செய்திருந்தது. ஆனாலும், நகரத்தின் முக்கியமான மையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


கடந்த மாதம் மலேசிய நாடாளுமன்றம் தேர்தல் முறைகளில் சில சீர்திருத்தங்களை அறிவித்திருந்தது, ஆனாலும் மலேசியா விடுதலை பெற்றதில் இருந்து பாரிசான் நேசனல் கூட்டணி ஆட்சியில் இருந்து வருவதற்கு தேர்தல் முறைகளில் உள்ள சில குறைபாடுகளே காரணம் என எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. இந்தக் குறைபாடுகளை கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட சீர்திருத்தங்கள் நீக்கவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.


மூலம்

[தொகு]