2009 வேதியியல் நோபல் பரிசு ராமகிருஷ்ணன் உட்பட மூவருக்கு தரப்பட்டது
புதன், அக்டோபர் 7, 2009, சுவீடன்:
தமிழகத்தின் சிதம்பரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், தோமஸ் ஸ்டிட்ஸ் மற்றும் அடா யொனாத் ஆகியோர் ரைபோசோம்கள் குறித்த ஆய்வுக்க்காக இவ்வாண்டுகான வேதியியலுக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொள்கிறார்கள். இவர்களில் ராமகிருஷ்ணன் இந்தியாவில் பிறந்த அமெரிக்கர். ஏனைய இருவரில் ஒருவர் அமெரிக்கர் அடுத்தவர் இஸ்ரேலியர்.
பல்வேறு நோய்களைக் குணப்படுத்துவதற்கான புதிய நுண்ணுயிர்க்கொல்லிகளை தயாரிப்பதில் இவர்களது கண்டுபிடிப்பு பயன்படுகிறது என பரிசுக்குழு கூறுகின்றது. இவர்கள் மூவரும் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள். இதில் வேதியியல் துறைக்கான நோபல் பரிசைப் பெறும் நான்காவது பெண்மணி அடா யோனாத் ஆவார்.
கடந்த 40 ஆண்டுகளில் இந்த பரிசை பெறும் முதல் பெண்மணியும் இவர்தான். தங்களது சாதனையை ஏற்றுக்கொண்டு கருத்து தெரிவித்த அடா யோனாத் அவர்கள், "புதிர் நிறைந்த ரைபோசோம்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு இன்னமும் ஏராளம் பாக்கியிருப்பதாகவும், அதே சமயம் இதை புரிந்து கொள்வது தொடர்பில் தாங்கள் முக்கிய முன்னேற்றத்திற்கு வழி செய்திருப்பதாகவும்" தெரிவித்தார்.
இவர்கள் செல்களில் உள்ள ரைபோசோம்களின் பணி மற்றும் கட்டமைப்பு பற்றி ஆய்வு செய்துள்ளனர். செல்களில் ரைபோசோம்கள் புரதத்தைத் தயாரிக்கின்றன. இந்தப் புரதங்கள்தான் உடல்கூறு வேதியியல் பணியை கட்டுப்படுத்துகின்றன. ரைபோசோமை உருவாக்கும் ஆயிரக்கணக்கான அணுக்கள் ஒவ்வொன்றின் இட அமைப்பையும் படம் பிடிக்க இந்த மூவரும் எக்ஸ் ரே கிரிஸ்டலோகிராபி முறையைப் பயன்படுத்தியுள்ளனர்.
- வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நான் பாடம் சொல்லிக் கொடுத்த மாணவர் நோபல் பரிசு பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. | ||
—ஆசிரியர் கோவிந்தராஜன் (82), சிதம்பரம் |
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், சிதம்பரத்தில் 1952ம் ஆண்டு பிறந்தவர். ஒஹையோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். உயிரி வேதியியல் விஞ்ஞானி மோரிசியோ மோன்டலுடன் சேர்ந்து ஆய்வில் ஈடுபட்டார். யேல் பல்கலைக்கழகத்திலும் அவர் ஆய்வு மாணவராக இருந்துள்ளார். 1995ல் யூடா பல்கலைக்கழகத்தில் உயிரி வேதியியல் துறை பேராசிரியராக சேர்ந்தார். அங்கு அவர் புரதம்- ரிபோநியூக்ளிக் அமிலம் பற்றி ஆய்வு மேற்கொண்டார். அதையடுத்து அவர் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜில் உள்ள மூலக்கூறு உயிரியல் எம்ஆர்சி ஆய்வகத்துக்கு மாறினார்.
- ஆடா இ. யோனத்
இஸ்ரேலைச் சேர்ந்த யோனத், ஜெருசலேமில் 1939ல் பிறந்தார். வைஸ்மான் அறிவியல் கல்லூரியிலிருந்து 1968ல் எக்ஸ்ரே கிரிஸ்டலோகிராபி பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார்.
- தாமஸ் ஸ்டீட்ஸ்
அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் ஸ்டீட்ஸ் (69) விஸ்கான்சின் மாகாணம் மில்வாகியில் 1940ம் ஆண்டு பிறந்தார். ஹார்வார்டு பல்கலைக்கழகத்திலிருந்து 1966ல் உயிரி வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
மூலம்
- "Nobel Prize for chemistry of life". பிபிசி, அக்டோபர் 7, 2009
- "வேதியியல்: தமிழருக்கு நோபல்". தினமணி, அக்டோபர் 8, 2009
- "நோபல் பரிசு விஞ்ஞானி ராமகிருஷ்ணனின் ஆசிரியர்கள் நெகிழ்ச்சி". தினமலர், அக்டோபர் 8, 2009
- "பாக்டீரியாக்களின் ரைபோசோம்கள்". லங்காசிறீ, அக்டோபர் 7, 2009