2012 மாகாண சபைத் தேர்தல்: கிழக்கு மாகாணத்தில் எக்கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஞாயிறு, செப்டம்பர் 9, 2012

இலங்கையில் நேற்று இடம்பெற்ற மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இரண்டு கூடுதல் (போனஸ்) இடங்கள் உட்பட அதிகூடிய 14 இடங்களைப் பெற்று இலங்கையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முதலாவதாக வந்தது.


இலங்கையில் கிழக்கு மாகாணம்

இம்மாகாண சபையில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்கள் உள்ளடங்குகின்றன.


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 உறுப்பினர்களுடன் இரண்டாமிடத்தில் வந்தது. ஆளும் கூட்டணிக் கட்சியின் அங்கமான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு இம்முறை தனித்துப் போட்டியிட்டு மொத்தம் 7 இடங்களையும், முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 3 இடங்களையும், விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி ஒரு இடத்தையும் பெற்றுள்ளன.


கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பதற்கு, குறைந்தது 19 ஆசனங்கள் தேவைப்படுகின்ற நிலையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்குமா அல்லது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐதேகவின் ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


இதற்கிடையில், கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கையில், "சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் பேசுவதற்கு முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தியுள்ளதாகவும் அவர் தமக்கு ஆதரவு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்," எனவும் தெரிவித்தார்.


கிழக்கு மாகாண சபையின் ஆட்சியினை அமைப்பதற்கு தேவையான ஆசனங்களை எந்தவொரு கட்சியும் பெறாத நிலையில், தீர்மானிக்கும் சக்தியாக உள்ள சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு, மூத்த உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கும் என அக்கட்சியின் தலைவர் ரவூப் அக்கீம் தெரிவித்துள்ளார்.


இறுதி முடிவுகள்
  • ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 200, 044 வாக்குகள் (14 இடங்கள்)
  • இலங்கைத் தமிழரசுக் கட்சி - 193,827 வாக்குகள் - 11 இடங்கள்
  • ஐக்கிய தேசிய கட்சி - 74,901 வாக்குகள் (3 இடங்கள்)
  • தேசிய சுதந்திர முன்னணி - 9,522 வாக்குகள் (1 இடம்)


மூலம்[தொகு]

Bookmark-new.svg