அமெரிக்க செனட்டர் பர்மியச் சிறையிலிருந்து அமெரிக்கக் கைதியை விடுவித்தார்
சனி, ஆகத்து 15, 2009, மியான்மர்:
பர்மிய சனநாயகப் போராட்டத் தலைவி ஆங் சான் சூ கீயை சதிக்க அவரது வீட்டிற்கு இரகசியமாக நீச்சலடித்து சென்றதாக குற்றம் சாட்டி சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்கரை விடுவிப்பதில் அமெரிக்க செனட்டர் ஜிம் வெப் வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு மிகவும் அணுக்கமான வெப், பர்மிய இராணுவ ஆட்சி மன்றத் தலைவர் தான் ஸ்வீ யையும் சந்தித்தார். அந்த இராணுவ ஆட்சியாளரைப் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் பர்மியத் தலைநகர் நேப்பிட்டாவில் சந்தித்துள்ள முதலாவது உயர்நிலை அமெரிக்க அதிகாரி வெப் ஆவார்.
பின்னர் அமெரிக்க செனட்டர் ரங்கூனுக்குத் திரும்பி சூ கீ யைச் சந்தித்தார். இவ்வாரத் தொடக்கத்தில் சூ கீ யின் வீட்டுக் காவல் மேலும் 18 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட பின்னர் அந்நிய அதிகாரி ஒருவரை அவர் சந்தித்திருப்பதும் இது தான் முதன் முறையாகும்.
அதைத் தொடர்ந்து ஜான் யெத்தாவ் என்னும் அந்த அமெரிக்கரின் விடுதலையை பெறுவதில் அவர் வெற்றி அடைந்ததாக வாஷிங்டனில் உள்ள வெப் பின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை கூறியது.
சூ கீ யின் இல்லத்திற்கு நீந்திச் சென்றதற்காக யெத்தாவுக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
யெத்தாவை விடுவித்த பர்மிய அரசாங்கத்திற்கு வெப் நன்றி தெரிவித்துக் கொண்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது.
“அந்த நடவடிக்கை எதிர்காலத்தில் இரு தரப்புக்கும் இடையில் நம்பிக்கையை வளர்ப்பதற்குத் துணை புரியும்,” என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் யெத்தாவ், செனட்டர் வெப் பாங்காக் திரும்பும் அதே விமானத்தில் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.
இதற்கிடையில் சூ கீயை விடுதலை செய்யுமாறும் வெப் பர்மிய இராணுவ ஆட்சியாளர்களைக் கேட்டுக் கொண்டார். கடந்த 20 ஆண்டுகளில் பெரும்பகுதியைஅவர் வீட்டுக் காவலில் கழித்துள்ளார்.
அமெரிக்க செனட்டரைச் சந்திப்பதற்காக அவர் தமது இல்லத்திலிருந்து காரில் அழைத்துச் செல்லப்பட்டார். ரங்கூனில் உள்ள விருந்தினர் மாளிகையில் வெப் பும் சூ கீ யும் சந்தித்தனர். 45 நிமிடங்களுக்குப் பின்னர் சூ கீ அங்கிருந்து புறப்பட்டார்.
சூ கீ மீண்டும் காவலில் வைக்கப்பட்டதற்கு ஒர் அங்கீகாரமாக இராணுவ ஆட்சியாளர்கள் வெப் பின் பயணத்தை பயன்படுத்திக் கொள்ளக் கூடும் என்று பர்மிய கிளர்ச்சித் தரப்புக்கள் எச்சரித்துள்ளன.
1962 ம் ஆண்டு தொடக்கம் பர்மாவை இராணுவம் இரும்புக்கரத்துடன் ஆட்சி செய்து வருகிறது.