உள்ளடக்கத்துக்குச் செல்

ஆங் சான் சூ கீ மேலும் 18 மாதம் வீட்டுக் காவல் தண்டனையைப் பெற்றார்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஆகத்து 11, 2009, மியான்மர்:


மியான்மரில் ஜனநாயக ஆதரவு இயக்கத் தலைவி ஆங் சான் சூ கீ நாட்டின் பாதுகாப்புச் சட்டங்களை மீறினார் என்று தீர்ப்பளித்துள்ள ரங்கூன் நீதிமன்றம் அவருக்கு மேலும் 18 மாத வீட்டுக்காவல் தண்டனையை விதித்துள்ளது. இந்தத் தீர்ப்பின் விளைவாக அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் பலகட்சித் தேர்தலில் அவர் கலந்து கொள்ள முடியாமல் இருக்கும்.


மியான்மரில் ராணுவ ஆட்சியை ஒழித்துவிட்டு ஜனநாயகம் மலர வேண்டும் என்ற நோக்கில் ஆங் சான் சூ கி அகிம்சை முறையில் போராடி வருகிறார். அவர் மீது பல்வேறு குற்றங்களைச் சாட்டி மியான்மர் அரசு அவரை வீட்டுக் காவலில் வைத்துள்ளது.


ஏரிக்கரையிலுள்ள அவரது இல்லத்துக்கு அழைப்பு இல்லாமல், கடந்த மே மாதத்தில் நீந்திக் கடந்து வந்த அமெரிக்கர் ஒருவரை, தங்க அனுமதித்த்து மூலம் சூ கீ, வீட்டுக் காவல் விதிமுறைகளை மீறியிருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


நீதிமன்றம் விதித்த மூன்றாண்டு கால கடுங்காவல் சிறை தண்டனையை, இராணுவ ஆட்சியாளர்கள் பாதியாகக் குறைத்த்தோடு அந்த தண்டனையை வீட்டிலேயே கழிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்கள். கடந்த 20 வருட காலத்தில் 14 ஆண்டுகளாக ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆங் சான் சூ கீ அம்மையாருக்கு எதிரான தீர்ப்பு பற்றி அனைத்துலக மட்ட த்தில் கண்டங்கள் எழுப்பப்பட்டுள்ளன. சூகீ உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று அமெரிக்கா விடுத்த கோரிக்கையை ஆதரித்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலர் பான் கீ மூன் இந்தத் தண்டனையை தாம் வன்மையாக கண்டிப்பதாகக் கூறியுள்ளார்.


ஐரோப்பிய ஒன்றியம் கருத்து வெளியிடும் போது, பர்மிய இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக நடைமுறையிலுள்ள தடைகள் மேலும் கடுமையாக்கப் படும் என்று குறிப்பிட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் கூறுகையில், வரும் 2010ல் மியான்மரில் நடக்கவிருக்கும் பொது தேர்தலில் அவர் போட்டியிடக் கூடாது என்ற நோக்கத்தில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மூலம்

[தொகு]