ஆஷஸ் கிரிக்கெட் கோப்பையை இங்கிலாந்து மீண்டும் வென்றது
திங்கள், ஆகத்து 24, 2009, லண்டன், இங்கிலாந்து:
நேற்று ஞாயிறன்று லண்டனில் இடம்பெற்ற கடைசி தேர்வுத் துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணியை தோற்கடித்து மீண்டும் ஆஷஸ் கோப்பையை கைப்பற்றியது.
இங்கிலாந்து-ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையே வரலாற்று புகழ்மிக்க "ஆஷஸ்" டெஸ்ட் தொடர் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த போட்டி நடத்தப்படுகிறது. இதன்படி 65-வது ஆஷஸ் டெஸ்ட் கடந்த மாதம் இங்கிலாந்தில் தொடங்கியது. இதில் முதல் 4 டெஸ்டில் இரு அணியும் தலா ஒரு வெற்றி பெற்றன. இரு போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிந்தன.
இதனால் தொடர் சமன் ஆன நிலையில் கோப்பையை வெல்வது யார் என்பதை நிர்ணயிக்கும் பரபரப்பான 5-வது மற்றும் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 332 ரன்களும், ஆஸ்திரேலியா 160 ரன்களும் எடுத்தன. பின்னர் 172 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 373 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 546 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திட்ரேலிய அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டத்தில் முந்தைய நாள் சிறப்பான தொடக்கம் அமைத்து தந்த வாட்சன், சைமன் கட்டிச் இருவரும் சிறிது நேரத்தில் அடுத்தடுத்து எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்கள்.
இதை தொடர்ந்து அணித் தலைவர் ரிக்கி பொண்டிங்கும், மைக் ஹசியும் அணியை வீழ்ச்சியில் இருந்து மீட்கும் போராட்டத்தில் இறங்கினார்கள். ரன்-அவுட் செய்யப்பட்ட பாண்டிங் 66 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய துணைத் தலைவர் மைக்கேல் கிளார்க்கும் (0) வந்த வேகத்தில் ரன்-அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து விக்கெட்டுக்கள் மளமளவென்று சரிந்தன.
கடைசி விக்கெட்டாக மைக் ஹசி (121 ஓட்டம், 263 பந்து, 14 பவுண்டரி) ஆட்டம் இழக்க ஆஸ்திரேலிய அணி 348 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 197 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இங்கிலாந்து அணி மீண்டும் ஆஷஸ் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இங்கிலாந்து அணியில் ஸ்வான் 4 விக்கெட்டுகளும், ஹார்மிசன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இங்கிலாந்து அணியின் பிளின்டாப் தேர்வுத் துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்த தோல்வியின் மூலம் ஆஸ்ட்ரேலிய அணி முதல் முறையாக ஐ.சி.சி. தரவரிசையில் முதலிடத்தை இழந்துள்ளது.