சோமாலியா விமான நிலையம் மீது போராளிகள் எறிகணைத் தாக்குதல்
வியாழன், அக்டோபர் 22, 2009
சோமாலியாவின் தலைநகர் மொகடீசுவில் அமைந்துள்ள முக்கிய விமான நிலையம் ஒன்றின் மீது சோமாலியாவின் பிரிவினை கோரும் இசுலாமியப் போராளிகள் எறிகணைத் தாக்குதல் ஒன்றை நடாத்தியுள்ளார்கள்.
சோமாலியாவின் அதிபர் சேக் சரிவ் சேக் அகமட் விமானம் மூலம் பயணிக்க தயாராகிக் கொண்டு இருந்த வேளையில் போராளிகள் அவ் விமான நிலையத்தை இலக்கு வைத்து எறிகணைத் தாக்குதலை ஆரம்பித்ததாகவும் ஆனால் அதிபர் பயணிக்க இருந்த விமானம் எவ்வித பாதிப்புகளும் இன்றி புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் மொகடிஸ்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனாலும் அதை நோக்கியும் போராளிகள் தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் காவல்துறையினரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
இன்றைய தாக்குதலில் 20 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் இன்னும் 60 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் பெரும்பாலானவர்கள் பொது மக்கள் என்பதுடன் எறிகணைகள் விமான நிலையம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வீழ்ந்து வெடித்ததில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சோமாலிய செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆல்கைடா ஆதரவு பெற்றுள்ள பிரிவினை கோரும் இசுலாமியப் பிரிவினைவாதிகளுக்கும் சோமாலியப் படைகளுக்கும் இடையில் நடைபெறும் மோதல்கள் காரணமாக தினமும் அங்கு பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டுக் கொண்டுள்ள நிலையில் இந்தத் தாக்குதல் சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே சோமாலியா அரசிற்கு உதவும் பொருட்டு ஆபிரிக்க ஒன்றியத்தின் அமைதிப்படையினர் 5000 பேர் அங்கு நிலை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்
- "Shelling 'kills Somali civilians'". பிபிசி, அக்டோபர் 22, 2009
- "Mortars fired at Somalia's airport as president boards plane; at least 20 killed in battles". யாஹூ! செய்திகள், அக்டோபர் 22, 2009