டா வின்சி வரைந்த ஓவியம் ஒன்று புதிதாக அடையாளம் காணப்பட்டது
செவ்வாய், அக்டோபர் 13, 2009, பாரிசு:
இதுவரையில் அடையாளம் காணப்படாதிருந்த பெண் ஒருத்தியின் ஓவியம் ஒன்று அதன் மேலிருந்த கையடையாளம் மூலம் லியொனார்டோ டா வின்சி வரைந்ததாக இருக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
பாரிசில் உள்ள ஆய்வுகூடம் ஒன்றில் இடம்பெற்ற ஆய்வுகளில் இவ்வோவியத்தில் உள்ள வத்திக்கானில் இருக்கும் டா வின்சியின் ஓவியத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கையடையாளத்துடன் ஒத்துப் போகிறது.
ஆண்டிக்ஸ் டிரேட் கசெட் என்ற நிறுவனம் முன்னர் இந்த ஓவியத்தை "செருமன், 19ம் நூற்றாண்டின் முற்பகுதி" எனக் குறிப்பிட்டிருந்தது. இது இப்போது பல மில்லியன் பெறுமதியாக உள்ளது. இது முன்னர் $19,000 டாலர்களுக்கு கைமாறியது.
மையினாலும், சுண்ணாம்புக் கட்டிகளினாலும் தீட்டப்பட்ட இந்த ஓவியத்தில், இளம் பெண்ணின் ஆடைகள், மற்றும் தலையலங்காரம் 15ம் நூற்றாண்டு மிலான் பண்பாட்டை ஒத்தது எனக் கருதப்படுகிறது.
ஒக்சுபோர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் மார்ட்டின் கெம்ப் கருத்துத் தெரிவிக்கையில், இந்த ஓவியத்தில் உள்ள பெண் மிலானின் இளவரசர் லுடோவிக்கோ சுபோர்சா (1452-1508) என்பவரின் மகள் பியான்க்காவினூடையதாக இருக்கலாம் என்றார்.
அடுத்த ஆண்டு சுவீடனில் இடம்பெற்றவிருக்கும் ஓவியக் கண்காட்சியில் இது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
மூலம்
[தொகு]- "Finger points to new da Vinci art". பிபிசி, அக்டோபர் 13, 2009