நோபல் பரிசு பெற்ற தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி கிம் டாய் ஜுங் காலமானார்
செவ்வாய், ஆகத்து 18, 2009, தென் கொரியா:
தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி கிம் டாய்-ஜுங் அவரது 83 ஆவது வயதில் காலமானார். ஜனநாயகத்திற்காகவும் வடகொரியாவை மீள ஒன்றிணைக்கும் முயற்சிகளுக்கும் தனது வாழ்வை அர்ப்பணித்த கிம்முக்கு 2000 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த கிம், இருதயம் செயலிழந்ததைத் தொடர்ந்து மரணமடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படுகொலை முயற்சிகளிலிருந்து பல தடவைகள் உயிர் பிழைத்த கிம், சிறையில் கடும் சித்திரவதைகளை அனுபவித்தவர். அத்துடன், இரு தடவைகள் நாடு கடத்தப்பட்ட கிம், பல தடவைகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
1997 இல் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட கிம் 2003 வரை பதவி வகித்தார். 1948 இல் தென்கொரியா ஸ்தாபிக்கப்பட்டது முதல் ஆளுங்கட்சி வசமிருந்த அதிகாரத்தை 1997 இல் கிம் ஜனாதிபதியாகத் தெரிவானதன் மூலம் எதிர்க்கட்சி வசமாகியது. இதனால் புதிய வரலாறொன்றை ஏற்படுத்திய பெருமையையும் கிம் பெற்றார்.
2000 ஆம் ஆண்டு வடகொரியத் தலைவர் கிம் ஜோங்கல்லுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாடொன்றில் கலந்துகொண்டதே தனது தலைமைத்துவத்தின் மிகப்பெரிய சாதனையென செய்திச் சேவையொன்றுக்கு தெரிவித்திருந்த கிம், தனது கொள்கைகளிலிருந்து தான் ஒருபோதும் விலகப் போவதில்லையென்றும் அநீதியுடன் ஒருபோதும் இணக்கப்பாட்டை மேற்கொள்ளப் போவதில்லையெனவும் கூறி வந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.