முதலாளித்துவக் கொள்கையை அனுமதிக்க முடியாது - காஸ்ட்ரோ அறிவிப்பு
ஞாயிறு, ஆகத்து 2, 2009, கியூபா:
கியூபாவின் சமூக அரசியல் கொள்கைகளில் எதுவித மாற்றங்களும் செய்ய முடியாதெனவும் முதலாளித்துவக் கொள்கையை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லையெனவும் அந்நாட்டு சனாதிபதி ரவூல் காஸ்ட்ரோ, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை எச்சரித்துள்ளார்.
கியூபாவின் நாடாளுமன்றத்தின் ஆண்டு அமர்வு நேற்று இடம்பெற்றபோது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி ரவூல் காஸ்ட்ரோ அந்நாட்டின் சமூக அரசியல் கொள்கையை இவ்வாறு நியாயப்படுத்தியுள்ளார்.
கியூபா எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளை கருப்பொருளாகக் கொண்டு காஸ்ட்ரோவின் உரை அமைந்திருந்தது. அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:
கியூபாவின் அரசியல் மற்றும் சமூகக் கொள்கைகள் தவிர்ந்த ஏனைய எவருடனும் கலந்துரையாடப்படும். கியூபாவில் ஜனநாயக மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது தொடர்பாக அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹிலாரி கிளின்டனின் அறிக்கைக்குப் பதிலளிக்க வேண்டும்.
ஹிலாரி கிளின்டனுக்கும் அதேவேளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் நான் கூறுவது கியூபாவின் ஜனாதிபதியாக அந்நாட்டில் முதலாளித்துவத்தையோ புரட்சியையோ அனுமதிக்கப் போவதில்லை.
தொடர்ந்தும் எமது நாட்டிற்குரிய பொருத்தமான சமூகக் கொள்கையை தக்க வைத்துக் கொள்ளவும் பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும். அதனை அழிக்க வேண்டிய தேவையில்லை.
ஆனால், ஏனைய விடயங்களில் அமெரிக்காவுடன் நட்புறவுகளையும் பேச்சுகளையும் தொடர்வோம்.
எந்த விடயத்தையும் அமெரிக்காவுடன் பேசத்தயார். ஆனால், எமது அரசியலில் சமூகக் கொள்கைகளில் பேச்சுக்கு இடமில்லை. எமது பாரம்பரியங்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டுமெனத் தெரிவித்தார்.
காஸ்ட்ரோவின் இந்த உரைக்கு இடையிடையே நாடாளுமன்றத்தில் பலத்த கைதட்டல் நிறைந்திருந்தது.
மூலம்
[தொகு]- தினக்குரல்
- Castro says Cuban system to stay, பிபிசி