வாஸ்ப்-18பி கோள் தனது சூரியனுடன் மோதும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன
வியாழன், ஆகத்து 27, 2009, ஐக்கிய இராச்சியம்:
சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள் ஒன்று தனது சூரியனுடன் மோதுகைக்கு உள்ளாகும் என வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். WASP 18-b என்ற கோள் தனது சூரியனை ஒரு நாளைக்கும் குறைவான சுற்றுப்பாதையில் சுற்றி வருகிறது. அத்துடன் அது ஜுப்பிட்டரை விட 10 மடங்கு எடை கூடியது. இதன் சூரியன் (விண்மீன்) பூமியில் இருந்து 1,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. பிரித்தானிய வானியலாளர்கள் இக்கோளைக் கண்டுபிடித்திருக்கிறாகள்.
இக்கோளின் வயது கிட்டத்தட்ட ஒரு பில்லியன் ஆண்டுகள் ஆகும். கோளுக்கும் அதன் சூரியனுக்கும் இடையில் உள்ள ஈர்ப்புப் பேரலைத் தாக்கம் காரணமாக இரண்டும் ஈர்க்கப்பட்டு வருகின்றன. இதனால் கிட்டத்தட்ட இன்னும் ஒரு மில்லியன் ஆண்டுகளில் இக்கோள் இதன் சூரியனை மோதும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது.
இது ஒரு பெரும் எடை கொண்டுள்ளதும், அதன் சூரியனுக்கு மிகக் கிட்டவாக உள்ளதுமே இந்தக் கோளின் ஒரு பிரச்சினை. | ||
—பேராசிரியர் ஆண்ட்ரூ கொலியர் கமெரோன் |
புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரூ கமெரோன் இக்கோள் பற்றிக் கருத்துக் கூறுகையில் தெரிவித்ததாவது: "வாஸ்ப்-18பி கோள் பெரும் பருமனாக இருப்பதும் அது அதன் சூரியனுக்கு மிக நெருக்கமாக இருப்பதுவுமே இதன் பிரச்சினையாகும். அது தனது சூரியனை சுருளி போன்று சுற்றி வருவதால் அதனுடன் மோதும் சாத்தியக்கூறுகள் அதிகம்."
இங்கிலாந்தின் கீல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கொயெல் ஹெலியர் தலைமையிலான வானியலாளர்களே இக்கோளைக் கண்டுபிடித்தனர். அவர்களது ஆய்வுக் கட்டுரை 2009, ஆகஸ்ட் 27 நேச்சர் (Nature) இதழில் வெளிவந்துள்ளது. எமது சூரியனை விட கிட்டத்தட்ட 300 கோள்கள் விண்மீன்களைச் சுற்றி வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
மூலம்
[தொகு]- New Exoplanet Shouldn't Exist, Scientific American
- Planet found that defies the laws of physics, The Independent