உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை அமைதி பேச்சுக்களின் தோல்வி குறித்து நோர்வே விரிவான அறிக்கை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, நவம்பர் 12, 2011

இலங்கையில் அமைதி முயற்சிகள் தோல்வியுற்றது ஏன் என்பதை கண்டறிவதற்கு நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் நேற்று வெள்ளிக்கிழமை தலைநகர் ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது. நோர்வேயின் மைக்கேல்சன் கல்விக்கழகம் மற்றும் லண்டனில் இருந்து செயல்படும் கீழ்த்திசை மற்றும் ஆப்பிரிக்கக் கல்விகள் கழகம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டிருந்தன. 208 பக்கங்களைக் கொண்டதாக ‘அமைதிக்கான அடமானங்கள்‘ (Pawns of Peace) என்ற இந்த அறிக்கை இருந்தது.


நோர்வே சமாதானத் தூதராகப் பணியாற்றிய எரிக் சொல்ஹெய்ம்

இலங்கையில் நடந்த மோதலுக்கு முடிவு காண எடுக்கப்பட்ட இந்த அமைதி வழிமுறை தோல்வியில் முடிந்ததற்கு பல காரணங்களை இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.


இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் இந்த அமைதி முயற்சிகளில் இறங்கியபோது கூட, தங்களது இலட்சியங்களை நிலைப்பாடுகளை கைவிடாமலேயே இருந்து வந்துள்ளனர். இந்த அமைதி முயற்சி எப்படி அரசியல்ரீதியாக முடியவேண்டும் என்று இந்த இரு தரப்புகளுமே அவர்கள் வரையறுத்துக்கொண்ட நிலையிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யவில்லை என்று அது தெரிவிக்கிறது.


இலங்கையில் நிலவும் பரம்பரை அரசியல், உட்கட்சி போட்டிகள், வேண்டியவர்களுக்கு அனுகூலம் செய்யும் அரசியல், தேசியவாத அரசியல் அணி திரட்டல் ஆகியவை நாட்டை சீர்திருத்துவதற்கும் சர்வதேச நாடுகள் தலையிடுவதற்கும் இடைஞ்சலாக இருந்தன.


2004ம் ஆண்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் பிளவுண்டது, ராணுவ சமநிலையை, அரசுக்குச் சாதகமாக மாற்றியது என்று இந்த அறிக்கை கூறுகிறது.


அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசு இந்த அமைதி வழிமுறையை, பாதுகாப்பு உத்தரவாதங்கள், சர்வதேச கொடை வழங்கும் நாடுகளிடம் நிதி உதவி, மற்றும் அரசியல் ரீதியாக சிக்கலான பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவை மூலம், சர்வதேச மயமாக்க எடுத்த முயற்சிகள் சிங்கள தேசிய வாத எதிர்வினையைத்தான் தூண்டின என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. இதன் விளைவாக, ஒரு தேசியவாத முனைப்புள்ள கட்சி இலங்கையில் ஆட்சிக்கு வர உதவியது.


2003-2004 இல் சமாதான முயற்சிகள் மெதுவாக சிக்கறுக்கப்பட ஆரம்பித்தபோது கொழும்பு மீது புதுடில்லி அனுதாபம் கொண்டிருந்தது. 2004 இல் காங்கிரஸ் கட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் தமிழர் அபிலாஷைகளை நிறைவேற்றுமாறு தொடர்ச்சியாக கோரி வந்தது. ஆனால் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மீது அதன் இராணுவ ரீதியிலான தெரிவு தொடர்பாக எந்த அழுத்தத்தையும் பிரயோகிக்கவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தனிப்பட்ட சந்திப்புகளின்போது புலிகளுடன் நோர்வே அதிக நட்பாக இருப்பது குறித்து இந்தியா நோர்வேயை விமர்சித்தது. அத்துடன் புலிகளை உரிய இடத்தில் வைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியது. பொதுமக்கள் உயிரிழப்புகளை மட்டுப்படுத்துமாறு இந்தியா சில கோரிக்கைகளை விடுத்தாலும் புலிகளைத் தோற்கடிப்பதற்கான இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு தாம் ஆதரவளிப்பதை இந்தியா மிகத் தெளிவாக்கியது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த அறிக்கை வெளியீட்டு நிகழ்வில், இலங்கைக்கான முன்னாள் சமாதானத்தூதரும், நோர்வேயின் சர்வதேச மேம்பாட்டு அமைச்சருமான, எரிக் சொல்ஹெய்ம், அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை துணைச்செயலர் ரிச்சர்ட் ஆர்மிட்டேஜ், இலங்கையின் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


மூலம்

[தொகு]