உள்ளடக்கத்துக்குச் செல்

கம்போடியாவுடனான எல்லையை மூடப் போவதாக தாய்லாந்து எச்சரிக்கை

விக்கிசெய்தி இலிருந்து

சனி, நவம்பர் 7, 2009


தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.


தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ராவை கம்போடிய அரசு ஆலோசகராக நியமித்திருப்பதாக கம்போடியா அறிவித்ததிலிருந்து புதிய பிரச்சினை தொடங்கியுள்ளது. அந்த அறிவிப்பைத் தொடர்ந்து கம்போடியாவுடனான எல்லையை மூடப்போவதாக தாய்லாந்து மிரட்டல் விடுத்துள்ளது.


இப்பிரச்சினை காரணமாக முன்னதாக இரு நாடுகளும் அவற்றின் தூதர்களை திரும்ப அழைத்துக் கொண்டன. கம்போடியா கடினப் போக்கைத் தொடர்ந்து பின்பற்றினால் இருதரப்பு உறவு பாதிக்கப்படும் என்று தய்லாந்துப் துணைப் பிரதமர் சுதெப் தாக்சுபான் கூறினார்.


அத்துடன் அரசியல் சதியில் பாதிக்கப்பட்டவராக தக்சினைத் தாம் கருதுவதால் அவரை நாடு கடத்துவதற்கான கோரிக்கையை கம்போடியா நிராகரிக்குமெனவும் அந்நாட்டின் அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. தக்சினின் தலைமைத்துவ ஆளுமையையும் வியாபார அனுபவத்தையும் கம்போடியா மதிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அரசாங்கப் பேச்சாளர் அவர் நாட்டுக்கு ஒரு சொத்தாக இருப்பாரெனவும் தெரிவித்துள்ளார்.


கம்போடியாவில் உள்ள பழங்கால இந்துக் கோயிலான பிரியா விகார் கோயில் தொடர்பாக இவ்விரு நாடுகளுக்கும் இடையில் தகராறு நீடிக்கிறது. அந்தக் கோயில் அமைந்துள்ள இடம் தங்களுக்கு சொந்தமானது என்று இவ்விரு நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன.


கம்போடியத் தூதர் நோம்பென் திரும்பிய பிறகு, தாய்லாந்து அங்குள்ள கம்போடியத் தூதரகத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.


இந்நிலையில் தாய்லாந்து- கம்போடியா உறவு பாதிக்கப்பட்டிருப்பது குறித்து கவலை அடைவதாக சிங்கப்பூர் தெரிவித்துள்ளது. “இது தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்புக்கு (ஆசியான்) நல்லதல்ல. ஆசியானின் நீண்ட கால நலனை கருத்தில்கொண்டு இவ்விரு நாடுகளும் அவற்றின் கருத்து வேறுபாடுகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்,” என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. தாய்லாந்து பிரதமர் அபிசித் விஜேஜீவா ஆசியானின் பிராந்திய மாநாடு ஒன்றை ஆரம்பித்து வைக்க இருக்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசியானில் இரு நாடுகளுமே அங்கம் வகிக்கின்றன.


2006 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் இடம்பெற்ற புரட்சியை அடுத்து தக்சின் பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து, தக்சினின் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் அங்கு பல எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தக்சின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மூலம்

[தொகு]