உள்ளடக்கத்துக்குச் செல்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு பிடியாணை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, பெப்பிரவரி 13, 2011

பாக்கித்தானின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த பெனாசிர் பூட்டோ 2007 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு தொடர்பாக முன்னாள் இராணுவ ஆட்சியாளர் பெர்வேஸ் முஷாரஃப் மீது ராவல்பிண்டி பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் ஒன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.


பெர்வேஸ் முஷாரப்

2007ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி ராவல்பிண்டியில் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த வாரம் இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பாக்கித்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை வழக்கில், பெர்வேசு முஷாரப்புக்கு, தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பிப்ரவரி 19ம் நாளன்று அவர் நீதிமன்றத்திற்கு வரவேண்டும் என நீதிமன்றம் பணித்துள்ளது. தலிபான்கள் பெனாசிர் உயிரை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிடுகிறார்கள் என்ற விபரம் தெரிந்திருந்தும், அதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல்தர முஷாரப் தவறிவிட்டார் என சட்டநடவடிக்கை அதிகாரிகள் கூறுகின்றனர்.


பெனாசிரின் கணவரான இந்நாள் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, எல்லா உண்மைகளையும் கண்டறிந்து தனது மனைவியின் கொலைக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேனென சூளுரைத்துள்ளார். இப்போது முஷாரப் லண்டனில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.


முசாரப்பின் பேச்சாளர் பவாட் சவுத்திரி பிடியாணை குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், "இவ்வழக்குக் குறித்து எவ்வித ஆதாரமும் இல்லை. இது அரசியல் ஆதாயத்துக்காக எழுப்பப்பட்ட வழக்கு, (முன்னாள்) சனாதிபதி இது குறித்துக் கவலைப்படப்போவதில்லை," எனத் தெரிவித்தார்.


நாடு திரும்பி அடுத்த இரண்டு ஆண்டுகளில் பாக்கித்தானில் நடக்கக்கூடிய தேர்தல்களில் போட்டியிடவேண்டும் என்பதில் அவர் மும்முரமாய் இருக்கிறார். அந்த விஷயத்தை தற்போதைய பிடியாணை மேலும் சிக்கலாக்கும் என அவதானிகள் கருதுகின்றனர்.


மூலம்

[தொகு]