உள்ளடக்கத்துக்குச் செல்

கிளிநொச்சியில் மலசலக்குழியில் மனித சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மே 31, 2010


இலங்கையின் வடக்கே கிளிநொச்சியில் உள்ள கணேசபுரம் என்ற கிராமத்தில் மலசல குழியொன்றிற்குள் இருந்து மனித சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் சடலங்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், அந்தச் சுற்று வட்டாரத்தில் தேடுதல் நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


மீள்குடியேற்றத்திற்காகச் சென்ற காணி உரிமையாளர் ஒருவர் தமது வீட்டு மலசலகூடக் குழியைத் தொழிலாளர்கள் மூலம் துப்பரவு செய்தபோதே இந்த சடலங்கள் குழிக்குள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.


உடனே அங்கு விரைந்த கிளிநொச்சி மாவட்ட நீதவான் சிவகுமார் மற்றும் வவுனியா பொதுமருத்துவமனையின் சட்டவைத்திய அதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோரின் முன்னிலையில் இந்த சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டன. சடலங்களைப் பார்வையிட்ட நீதவான், மேலும் அவ்விடத்தில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிட்டார்.


கறுத்த பொலித்தீன் பைகளில் கட்டப்பட்ட நிலையில் ஐந்து சடலங்கள் அந்தக் குழிக்குள் இருந்ததைக் கண்டதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகிய திரு. சிறீதரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.


இந்தநிலையில் தோண்டியெடுக்கப்பட்ட சடலங்கள் வவுனியா பொது வைத்தியசாலைக்கு மரண விசாரணைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இந்த சடலங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் சீருடைகளை ஒத்த ஆடைகள் காணப்பட்டதாக திரு. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.


நீதிமன்ற உத்தரவுக்கமைய சடலங்கள் இருக்கும் காணிப் பகுதி பலத்த பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அவ்விடத்திற்கு நிலம் தோண்டும் கனரக வாகனங்கள் கொண்டு வரப்பட்டு, இன்று நீதவான் முன்னிலையில் நிலத்தை மேலும் தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மூலம்

[தொகு]