உள்ளடக்கத்துக்குச் செல்

நைஜர் அரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் வெற்றி

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மார்ச்சு 15, 2011

நைஜரில் கடந்த சனிக்கிழமை அரசுத்தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக இடம்பெற்ற இரண்டாவது சுற்றுத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் மகமது இசோபு 58% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


எதிர்க்கட்சித் தலைவர் மகமது இசோபு

மகமது இசோபு முன்னர் நடந்த இரண்டு தேர்தல்களில் கடந்த ஆண்டில் இராணுவத்தினரால் பதவியில் இருந்து அகற்றப்பட்ட அரசுத்தலைவர் மமடூ தாஞ்சாவினால் தோற்கடிக்கப்பட்டிருந்தார். இம்முறை தாஞ்சா போட்டியிடவில்லை. அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் செய்னி ஊமரூ 42 வீத வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார்.


தேர்தலை அடுத்து நாட்டில் மக்களாட்சியைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சமூக சனநாயகக் கட்சித் தலைவர் இசோபு கடந்த சனவரியில் நடந்த முதற் சுற்றுப் போட்டியில் முன்னணியில் இருந்தார்.


ஏப்ரல் மாதத்தில் மக்களால் தெரிவு செய்யப்படும் தலைவரிடம் ஆட்சியை ஒப்படைப்போம் எனக் கூறிய இரானுவத்தினர் தாம் எக்கட்சிக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.


10 ஆண்டுகளாக அரசுத் தலைவராக இருந்த தாஞ்சா தனது பதவிக்காலத்தை நீடிக்க முயன்றபோது கடந்த ஆண்டு பெப்ரவரியில் இராணுவப் புரட்சி ஒன்றை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இவர் தற்போது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.


மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் பெரும்பாலான பகுதிகள் பாலைவனங்களாகும். ஆனாலும் அங்கு யுரேனியக் கனிமம் அதிகமாக உள்ளதால், கோடிக்கணக்கான் டாலர்கள் அங்கு முதலீடு செய்யப்படுகிறது. உலகின் மிக வறுமையான நாடுகளில் ஒன்றான நைஜர் 1960 ஆம் ஆண்டில் விடுதலை பெற்றதில் இருந்து பல முறை இராணுவ ஆட்சிக் கலைப்புகளைக் கண்டுள்ளது.


கடந்த சில ஆண்டுகளாக அல்-கைடா தீவிரவாதிகள் இங்கு வெளிநாட்டினரைக் கடத்தும் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]