அழிவின் விளிம்பில் அபூர்வமான இந்தியத் தாமரை

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, செப்டம்பர் 27, 2009, இந்தியா:


உலகெங்கும் இல்லாத வகையில், இந்தியாவில் மட்டுமே இருக்கும் ஒரு வகை அபூர்வமான தாமரை மலர்ச் செடி அழிவை நோக்கிச் செல்கிறது.


இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயா மாநிலத்தின் தலைநகரான ஷில்லாங்குக்கு 15 கிலோ மீட்டர் தொலைவில் ஸ்மிட் எனும் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் இருக்கும் ஒரு குட்டையிலேயே இந்த அரிய வகை தாமரை மலர்ச் செடிகள் உள்ளன. அதுவும் தற்போது 15-20 செடிகளே உள்ளன.


இவற்றைப் பெருக்குவதிலும் பார்க்கப் பாதுகாப்பது இப்போது மிகவும் முக்கியமானதாகத் தெரிகிறது.

—பேராசிரியர் பிரமோத் டாண்டன்

பொதுவாக லில்லி செடியை ஒத்த இந்த வகை தாமரை மலரின் செடியை பாதுகாத்து அதைப் பெருக்கும் நடவடிக்கைகள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்று பிரபல தாவரவியல் வல்லுநரும், ஷில்லாங்கில் இருக்கும் வடகிழக்கு மலைப்பகுதி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான பேராசிரியர் பிரமோத் டாண்டன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.


அரிய தாவரங்கள் மற்றும் மலர்ச் செடிகள் அழிந்து வருவது உலகளாவிய ஒரு பிரச்சினை என்றும், அதை எதிர்கொள்ள உலகளவில் ஒரு செயற்திட்டம் தேவை என்றும் பேராசிரியர் டாண்டன் கூறுகிறார். உலகளவில் தகுதியும் திறமை வாய்ந்தவர்களும் ஒருங்கினைந்து செயற்படவேண்டியது மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவிக்கிறார்.


"நிம்ஃபியா டெட்ரோகொனா" (Nymphaea tetragona) எனும் அந்த அரிய வகை தாமரைச் செடியை பாதுகாக்க இந்திய அரசு ஓரளவு நிதி ஒதுக்கீட்டை செய்திருந்தாலும் அது போதுமானதாக இல்லை என்றும் அவர் கருத்து வெளியிடுகிறார்.

மூலம்[தொகு]

  • பரமேஸ்வரன் சிவராமகிருஷ்ணன் "Rare Indian lotus 'disappearing'". பிபிசி, செப்டம்பர் 23, 2009