பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, அக்டோபர் 9, 2009


அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு 2009 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


அமைதி நோபல் பரிசுக்காக மொத்தம் 205 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து பராக் ஒபாமாவை நோபல் விருதுக் கமிட்டி தேர்வு செய்து அறிவித்துள்ளது.


இது குறித்து நோபல் கமிட்டி வெளியிட்டுள்ள செய்தியில், மக்களிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தியமைக்காகவும் சர்வதேச ரீதியில், அணு ஆயுதப் பரவலைத் தடுக்க பாடுபட்டமைக்காகவும், சர்வதேச நாடுகளிடையே நல்லெண்ணத்தை உருவாக்கப் பாடுபட்டமைக்காகவும் பராக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டு கூட பூர்த்தியடையாத ஒபாமாவுக்கு இப்பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு நோர்வேயில் தலைநகர் ஒஸ்லோவில் வெளியான போது, கூடியிருந்த பார்வையாளர்கள் பலருக்கு பெரும் ஆச்சரியத்ததை ஏற்படுத்தியது. அவர்களில் பலர் நம்பமுடியாத பிரமிப்பில் ஆழ்ந்தனர்.


இப்படியான ஒரு பரிசை அவருக்கு வழங்குவதற்கான காலம் இன்னும் வரவில்லை என்று வாசிங்டனில் இருக்கும் பலர் நம்புவதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.


பதவியில் இருக்கும் போது நோபல் பரிசு பெறும் மூன்றாவது அமெரிக்க அதிபர் ஒபாமா ஆவார். இவருக்கு முன்னால் தியோடர் ரூசுவெல்ட், வூடுரொ வில்சன் ஆகியோர் பெற்றிருந்தனர்.


நோபல் அமைதிப்பரிசு 1901 ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

மூலம்