பர்மாவின் ஆங் சான் சூச்சி விடுதலை

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, நவம்பர் 14, 2010

கடந்த ஏழு ஆண்டுகளாக பர்மாவின் இராணுவ ஆட்சியாளர்களால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த மக்களாட்சிக்காகக் குரல் கொடுத்த ஆங் சான் சூச்சி நேற்று நவம்பர் 13, சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.


ரங்கூனில் உள்ள அவரது வீட்டின் முன்னால் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களின் முன்னால் அவர் உரையாற்றும் போது ”ஒற்றுமையின் மூலமே எமது குறிக்கோளை எட்ட முடியும்” எனக் கூறினார்.


அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூச்சி அம்மையார் கடந்த 21 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் சிறையிலும், வீட்டுக்காவலிலும் கழித்தார். இவரது விடுதலைக்கு முன்நிபந்தனைகள் ஏதாவது வைக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.


20 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்ற வாரம் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களை அடுத்து இவர் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்தேர்தல் ஒரு பெரும் மோசடி என உலக நாடுகள் வர்ணித்திருந்தனர்.


1990 இல் இடம்பெற்ற தேர்தல்களில் சூச்சியின் மக்களாட்சிக்கான தேசிய முன்னணி பெரும் வெற்றி பெற்றிருந்தது. ஆனாலும் இராணுவ ஆட்சியாளர்களால் அக்கட்சி ஆட்சியமைக்கத் தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் சூச்சி அம்மையார் தடுப்புக் காவலிலும் வீட்டுக்காவலிலும் வைக்கப்பட்டார்.


பல வெளிநாட்டுத் தலைவர்கள் இவரது விடுதலையை வரவேற்றிருக்கிறார்கள். "சூச்சியின் விடுதலை எப்போதோ நடந்திருக்க வேண்டியது" என அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா கூறினார்.


மூலம்[தொகு]