2009 இலக்கியத்துக்கான நோபல் பரிசு செருமானிய எழுத்தாளருக்குக் கிடைத்தது
வியாழன், அக்டோபர் 8, 2009, சுவீடன்:
2009ஆம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் பரிசு ருமேனியாவில் பிறந்த ஜெர்மனியப் பெண் எழுத்தாளரான கெர்தா முல்லருக்கு வழங்கப்பட்டுள்ளது.
1901ஆம் ஆண்டு நோபல் பரிசு நிறுவப்பட்டதிலிருந்து இன்று வரை நோபல் பரிசு பெற்ற 12வது பெண் எழுத்தாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் முல்லர். 2007ஆம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் பரிசு சிம்பாப்வேயில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர் டோரிஸ் லெசிங்கிற்கு வழங்கப்பட்டது.
ருமேனியாவில் நடந்த கம்யூனிச அடக்குமுறைக்கு எதிரான ஒரு குரலாக இவரது எழுத்துக்கள் அமைந்துள்ளதாக விமர்சகர்களால் புகழப்பட்டுள்ளது.
ருமேனியாவில் 1953ஆம் ஆண்டு பிறந்த ஹெர்தா மியுல்லர். விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு இவரது தாயாரை சோவியத் யூனியன் அரசு கடும் உழைப்பிற்கான முகாமிற்கு கொண்டு சென்றது. இவரது குடும்பம் ருமேனியாவின் ஜெர்மன் சிறுபான்மையினராக இருந்து வந்தனர்.
"தி லேன்ட் ஆஃப் கிரீன் பிளம்ஸ்" என்ற மியுல்லரின் நாவல் ருமேனியாவில் சர்வாதிகார ஆட்சியில் ஜெர்மனியினர் கண்ட அடக்குமுறையை சித்தரிப்பதாய் அமைந்து பல பரிசுகளை வென்றது.
இந்த பரிசுக்காக இவரை தேர்வு செய்த நீதிபதிகள் "உடமையிழந்தவர்களின் நிலக்காட்சியை கவிதையின் செறிவுடனும், வெளிப்படையான உரை நடையிலும்" சித்திரப்படுத்தியுள்ளார் என்று புகழ்ந்தனர்.
இவர் அடக்குமுறை கம்யூனிச ருமேனியாவிலிருந்து 20 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியேறி ஜெர்மனிக்கு குடி பெயர்ந்தாலும் இவரது கவிதைகளிலும், கதைகளிலும் தொடர்ந்து அடக்குமுறை, சர்வாதிகாரம் போன்ற கதைக்கரு இடம்பெற்று வந்துள்ளதாக விமர்சகர்கள், மதிப்புரையாளர்கள் கூறியுள்ளனர்.
இவரும் தன்னுடைய கடந்த கால ருமேனிய அனுபவத்தை அழிக்க முடியாதது என்று கூறியுள்ளார்.
மூலம்
[தொகு]- "Mueller wins Nobel literary prize". பிபிசி, அக்டோபர் 8, 2009
- "ஜெர்மன் பெண் எழுத்தாளர் ஹெர்தா மியுல்லருக்கு இலக்கிய நோபல் பரிசு". லங்காசிறீ, அக்டோபர் 8, 2009