உள்ளடக்கத்துக்குச் செல்

ஈழப்போர்: சேனல் 4 காணொளி குறித்து இலங்கை மீது பிரித்தானியா அழுத்தம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூன் 16, 2011

இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்டப் போரின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆவணப்படம் பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சியில் கடந்த செவ்வாய் அன்றிரவு ஒளிபரப்பாகியுள்ள நிலையில், இலங்கை அரசு இது குறித்த விசாரணைகளை நடத்த வேண்டும் என்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன் கோரியுள்ளார்.


சேனல் 4 தொலைக்காட்சியால் "இது வரை வெளியாகாத படங்கள்" என்று கூறப்படும் ஒளிப்படங்களில், இலங்கை இராணுவம் தமிழ் மக்களை சட்டவிரோதமாக கொலை செய்வதாகக் கருதப்படக் கூடிய படங்கள் இடம் பெற்றிருந்தன.


பிரிட்டனின் வெளியுறவுத்துறையின் துணை அமைச்சரான அலிஸ்ட்டர் பர்ட், இந்த ஆவணப்படத்தை பார்த்து தாங்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும், அதை பார்க்கும் போது சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியதற்கான ஆதாரங்கள் இருப்பது போல இருக்கிறது என்றும் கூறியுள்ளார். இந்த விடயங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து அனைத்து சாத்தியக்கூறுகளையும் கண்டறிய பிரிட்டன் தயாராக இருப்பதாக பிரிட்டனின் வெளியுறவுத்துறையின் துணை அமைச்சர் அலிஸ்ட்டர் பர்ட் தெரிவித்துள்ளார்.


இலங்கை பாதுகாப்பு அமைச்சு இந்த வீடியோவை நிராகரித்துள்ளது. இராணுவத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்துவதற்காக இந்த வீடியோ போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது.


சுமார் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்ட இந்த யுத்தத்தில் இலங்கை இராணுவம் மற்றும் தமிழ் புலிகள் ஆகிய இரு தரப்பு மீதும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.


இலங்கையின் கொலைக்களம் எனத் தலைப்பிடப்பட்ட, ஒரு மணித்தியாலத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டதாக தோன்றும் நிர்வாண பெண்களின் சடலங்கள் காணப்படுகின்றன. சேனல் 4 தொலைக்காட்சி கடந்த 2 ஆண்டுகளாக காணொளிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளைத் திரட்டியதன் மூலம் இந்தக் குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.


இராணுவத்தினரால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் மேற்படி வீடியோக்களில் ஒன்றில், ஒருபெண் உட்பட குறைந்தபட்சம் 3 கைதிகள், கைகள் கட்டப்பட்ட நிலையில், நெருங்கிய தூரத்தில் வைத்து சுடப்படும் காட்சி உள்ளது. அதில், அவர்களை எப்படி கொல்வது என்பதை சிப்பாய் ஒருவர் ஏனையோருக்கு அறிவுறுத்துகிறார். தமிழீழ விடுதலைப் புலிகளானால் மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகங்களையும் சனல் 4 வீடியா காண்பித்துள்ளது.


பாதுகாப்பு வலயமென அறிவிக்கப்பட்ட பகுதியிலுள்ள வைத்தியசாலையொன்றின் மீது ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை சாட்சிகள் விபரிப்பதும் அந்த படத்தில் உள்ளது.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]