மூழ்கிவரும் ஆற்றுப்படுகைகளால் கோடிக்கணக்கானோர் பாதிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், செப்டம்பர் 22, 2009

கொலராடோ ஆறு


உலகின் பெரும்பாலான ஆற்றுப்படுகைகள் நீரில் மூழ்கிவருவதனால், பல கோடிக்கணக்கான மக்கள் வெள்ள அச்சுறுத்தலை எதிர்நோக்குகிறார்கள்.


நதிகளுக்கு குறுக்கே அணைகட்டுதல் மற்றும் அவற்றை திசை திருப்புதல் ஆகிய நடவடிக்கைகளால், இந்த ஆற்றுப்படுகைப் பகுதிகளில் வண்டல் மண் மற்றும் கனிம படிமங்கள் குறைந்து வருகின்றன.


நைல் நதி முதல் கொலராடொ நதி வரை பல நதிகள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.


இந்தப் பகுதிகளில் கிட்டத்தட்ட அரை பில்லியன் மக்கள் வாழ்வதாக ஆய்வாளர்கள் இயற்கை நிலவளவியல் குறித்த சஞ்சிகை ஒன்றில் எழுதியிருக்கிறார்கள்.


அண்மைக் காலங்களில் 85 வீதமான உலகின் முக்கிய பாசனப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கணித்துள்ளனர். நிலம் நீரில் மூழ்குவதாலும், புவி வெப்பமடைவதால், கடல் மட்டம் அதிகரிப்பதாலும், அடுத்துவரும் 40 வருடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய நிலத்தின் அளவு 50 வீதத்தால் அதிகரிக்கும்.


"ஆசியாவின் ஐராவதி ஆற்றுப்படுகையில்... மற்றும் கங்கை-பிரம்மபுத்திராவில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்"

—இரீனா ஓவரீம்
கொலராடோ பல்கலைக்கழகம்

தாழ்வான படுகைகள் அவற்றுக்கு நீர் வழங்கும் நதிகளினாலோ அல்லது கடல் அலைகளினாலோ வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் கொலராடொ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அல்பேர்ட் கிட்னர் கூறுகிறார்.


கடல் மட்ட அதிகரிப்பிலும் பார்க்க மனிதனின் செயற்பாட்டால் இந்த பகுதிகள் பல ஏற்கனவே பாதிக்கப்படத் தொடங்கிவிட்டதாகவும் அவர்கள் வாதிடுகிறார்கள்.


அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் ஆற்றுப்படுகைகள் ஆசியாவின் வளரும் நாடுகளிலேயே அதிகமாக இருப்பதாக கூறும் ஆய்வாளர்கள், ஆனால் செல்வந்த நாடுகளின் ஆற்றுப்படுகைகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். குறிப்பாக பிரான்சின் றூண் மற்றும் இத்தாலியின் போ ஆகிய ஆற்றுப்படுகைகளும் இதில் அடங்குகின்றன.


போ டெல்டா பகுதி, குறிப்பாக மெதேன் வெளியேற்றத்தால், 20 ஆம் நூற்றாண்டில் 3.7 மீட்டர்கள் நீரில் மூழ்கியுள்ளது.


இந்தியாவின் கிருஷ்ணா நதியை ஒட்டியை டெல்டா பகுதியும் இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

மூலம்[தொகு]