உள்ளடக்கத்துக்குச் செல்

தென்னிலங்கையில் இரு முஸ்லிம் மதக்குழுக்கள் மோதல், 3 பேர் இறப்பு

விக்கிசெய்தி இலிருந்து
களுத்துறை மாவட்டம்

சனி, சூலை 25, 2009 பேருவளை, இலங்கை:


இலங்கையின் தென்பகுதியில் உள்ள களுத்துறை மாவட்டத்தின் பேருவளையில் மஹகொடை பகுதியில் இரண்டு முஸ்லிம் குழுக்களிடையே வெள்ளியன்று இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், ஒன்பது போர் வரையில் படுகாயமடைந்துள்ளனர். முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றும் இச்சம்பவத்தில் தீவைத்து எரிக்கப்பட்டது.


பேருவளைப் பகுதியில் உள்ள குறிப்பிட்ட இரு முஸ்லிம் மதக்குழுக்களிடையேயும் நீண்ட காலமாக பகைமை நிலவி வந்துள்ளது. இந்தப் பகைமை நேற்று வெள்ளிக்கிழம இரவு மோதலாக வெடித்து பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியது.


குறிப்பிட்ட ஒரு மதப்பிரிவினருக்குச் சொந்தமான பள்ளிவாசல் மற்றைய மதப் பிரிவினரால் எரிக்கப்பட்டது. இதன்போது இடம்பெற்ற மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் காயமடைந்து மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டனர்.


பைத்துல் முபாரக் முஸ்தபவிய்யா புகாரித் தக்கியா, தீவைத்து கொளுத்தப்பட்ட மஸ்ஜிதுர் ரகுமான் பள்ளிவாசல் பகுதிகளில் விசேட அதிரடிப் படையினரும், இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர். அமைதியைப் பேணுமாறு இரு குழுக்களிடையேயும் முக்கிய பிரமுகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


பள்ளிவாசல் வளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகளும் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளன. பேருவளை பொலிஸார் மேலதிக புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


இச்சம்பவத்தையடுத்து பேருவளைப் பகுதியில் தொடர்ந்தும் பதற்றம் காணப்படுவதால் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலவரையறையற்ற ஊரடங்கும் இப்பகுதியில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூலம்

[தொகு]