மலேசியாவில் புதிய பாதுகாப்புச் சட்டத்தை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஆகத்து 1, 2009, கோலாலம்பூர், மலேசியா:


மலேசியாவில் சர்ச்சைக்குரிய பாதுகாப்புச் சட்டத்தை அகற்றும்படி அரசாங்கத்தை கோரி, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தெருக்களில் கூடி மாபெரும் பேரணியை நடத்தினர். அவர்களை நோக்கி போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி நீர்க் குழாய்களால் நீரைப் பீய்ச்சி அடித்தனர்.


இன்று கோலாலம்பூர் மாநகர் மையத்தில் நடைபெற்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட (இசா) எதிர்ப்புப் பேரணி மீது போலீசார் மேற்கொண்ட மாபெரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மொத்தம் 438 பேர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர்களில் 435 பேர் மலாய்க்காரர்கள், அதே வேளை 37 பேர் பெண்கள் என கோலாலம்பூர் போலீஸ் தலைமை அதிகாரி முகமட் சப்து ஒஸ்மான் தெரிவித்தார். மேலும் 38 பேர் 18 வயதுக்கும் குறைவான சிறார்களாவர்.


இன்று காலை முன்னேரம் ஏழு மணிவாக்கில் தொடங்கிய கைது நடவடிக்கை, “சட்டவிரோத நடவடிக்கைகளைத்” தடுப்பதற்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 105ன் கீழ், மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.


அவர்களில் பெரும்பாலோர் விசாரிக்கப்படுவதற்காக செராஸ் போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த கைதிகளைச் சந்திப்பதற்கு வழக்குரைஞர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


பிகேஆர் நடைமுறைத் தலைவர் அன்வார் இப்ராகிம், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், ஜசெக தலைவர் லிம் கிட் சியாங், இசா ஒழிப்பு இயக்கத்தின்(GMI) தலைவர் சையட் இப்ராகிம் சைய்ட் நோ ஆகியோர் உட்பட மேலும் 11 பேரையும் போலீசார் விசாரிப்பதாக முகமட் சப்து கூறினார்.


புதிய பாதுகாப்புச் சட்டத்தின்படி எவரையும் விசாரணயின்றித் தடுப்புக் காவலில் வைப்பதற்கு காவல்துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள் நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் ரத்துச் செய்யப்பட மாட்டாது. அதற்கு பதில் அது திருத்தப்படும் அல்லது நடப்பு சூழலுக்கு ஏற்ப புதிய பெயரைப் பெறுவதற்கும் சாத்தியம் இருப்பதாக தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

மூலம்[தொகு]