இலங்கைக்கு 2.6 பில்லியன் டாலர் கடன் வழங்க பன்னாட்டு நாணய நிதியம் இணக்கம்

விக்கிசெய்தி இலிருந்து
பன்னாட்டு நாணய நிதியத்தின் உறுப்பு நாடுகள்

சனி, சூலை 25, 2009 வாசிங்டன், அமெரிக்கா:


இலங்கைக்கு உலக கடன் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள நிலைமையை எதிர்கொள்வதற்கும் மற்றும் போருக்குப் பின்னரான மீள்கட்டுமான செலவுகளுக்கும் உதவுவதற்காக அந்த நாட்டுக்கு பன்னாட்டு நாணய நிதியம் 2.6 பில்லியன் டாலர்கள் கடனை அங்கீகரித்துள்ளது.

முதல் தவணையாக 320 மில்லியன் டாலர்களை இலங்கை உடனடியாகப் பெற முடியும் என்றும், அடுத்த கட்ட கொடுப்பனவுகள், ஒவ்வொரு காலாண்டிலும் மேற்கொள்ளப்படும் மீளாய்வுகளின் அடிப்படையில் வழங்கப்படும் என்றும், சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

விடுதலைப்புலிகளை தோற்கடித்த அரசாங்கப் படைகளின் அண்மைய தாக்குதல்களின் போது எழுந்துள்ள மனிதாபிமான அதிருப்திகளை முன்வைத்து, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபையின் இந்த முடிவை ஆதரிக்க பிரிட்டனும், அமெரிக்காவும் மறுத்து விட்டன.


அதிகளவுக்கு இலங்கைக்கு தேவைப்படும் மோதலிற்கு பின்னரான மீள்கட்டுமான நிவாரண முயற்சிகளுக்கான வளங்களின் கிடைப்பனவை உறுதிப்படுத்தும் அதேசமயம் நிதி நிலைமையை வலுப்படுத்துவதற்காக நாணய நிதியம் இக்கடனை வழங்குவதாகவும் இதுவே முக்கியமான நோக்கம் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.


அத்துடன், சர்வதேச கையிருப்புகளை கட்டியெழுப்புவதற்காக இலங்கையின் நிதி முறைமையை வலுப்படுத்துவதும் இந்தத் திட்டத்தின் நோக்கம் எனவும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. கடந்த மார்ச்சில் சர்வதேச நாணய நிதியத்திடம் 1.9 பில்லியன் கடனுக்கு இலங்கை அரசாங்கம் விண்ணப்பித்திருந்தது. அந்நிய செலாவணி கையிருப்பு 6 வார இறக்குமதிக்கு மட்டுமே போதியதாக வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து சென்மதி நிலுவை கொடுப்பனவுகளுக்காக கடன் கோரப்பட்டது.


சர்வதேச நிதிநெருக்கடியானது இலங்கையின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளரும் நிறைவேற்று சபையின் பதில் தலைவருமான தகாட்டோசி காட்லோ கூறியுள்ளார். அரசாங்கத்தின் ஆர்வமான திட்டத்திற்கு நாணய நிதியம் ஆதரவளித்துள்ளது. நிதிநிலைமை. அந்நிய செலாவணி என்பனவற்றை மீளக்கட்டியெழுப்பவும் மோதலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறிப்பிடத்தக்க புனர் நிர்மாணப் பணிகளுக்கான தேவைகளை கருத்தில் கொண்டு இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எதிர்காலத்தில் உயர்ந்த மட்ட பொருளாதார வளர்ச்சிக்கான அத்திபாரத்தை இடமுடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.


அதேசமயம் யுத்தம் முடிவடைந்ததால் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை அனுகூலமாக பயன்படுத்தி தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தி பரும்படியாக்க பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுவான பொருளாதார வளர்ச்சியையும் அரசு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


நாணய நிதிய வாக்கெடுப்பில் பிரிட்டன் உட்பட 5 நாடுகள் கலந்துகொள்ளவில்லை


இலங்கைக்கு 2.6 பில்லியன் டொலர் கடனை வழங்க சர்வதேச நாணய நிதியம் வெள்ளிக்கிழமை இரவு அங்கீகாரம் வழங்கியிருக்கும் அதேசமயம், இது தொடர்பான வாக்கெடுப்பில் பிரிட்டன், அமெரிக்கா, ஆர்ஜெண்டீனா, பிரான்ஸ், செருமனி ஆகிய நாடுகள் கலந்துகொள்ளவில்லை.


நாணய நிதிய நிகழ்ச்சித்திட்டம் வெற்றியடைவதற்கு இலங்கையின் அரசியல் சூழ்நிலை நெருக்கடியானதாக இருப்பதாக பிரிட்டனின் நிதியமைச்சர் ஸ்டீபன் டிம்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததுடன், முகாம்களில் உள்ள அகதிகள் தொடர்பாகவும் கவலையை வெளிப்படுத்தி இருந்ததாக லண்டன் ரைம்ஸ் பத்திரிகை நேற்று சனிக்கிழமை தெரிவித்திருந்தது.


சமூக மற்றும் மீள் கட்டுமான நடவடிக்கைகளுக்காக அனுசரணையான இந்தக்கடன் வழங்கும் திட்டமானது இராணுவ பலவீன ஒதுக்கீட்டிற்கு உள்ளடக்கப்படுகின்றதா என்பதை பிரிட்டன் கவனிக்கும் என்று பிரிட்டிஷ் அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி "ரைம்ஸ்' பத்திரிகை தெரிவித்துள்ளது.


அத்துடன் அகதிமுகாம்களுக்கு இந்த நிதியை செலவிடுமாறும் பிரிட்டன் அழைப்பு விடுத்திருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையில் 5 சதவீத வாக்களிக்கும் உரிமையை பிரிட்டன் கொண்டுள்ளது. 51 சதவீதமான வாக்குகள் கிடைத்தால் பிரேரணையை நிறைவேற்று சபை நிறைவேற்ற முடியும். ஆனால், யுத்தம் முடிவடைந்துள்ளதால் சமாதானத்தை இலங்கை எட்டமுடியுமென்று சர்வதேச நாணய நிதியமும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் நம்புகின்றனர்.


இலங்கை மற்றும் தமிழர்களுக்கான சர்வகட்சி பாராளுமன்றக் குழுவுக்கு நிதியமைச்சர் ஸ்ரீபன் ரிம்ஸ் எழுதியுள்ள கடிதத்தில்,"சர்வதேச நாணய நிதியத்தின் ஏற்பாட்டிற்கு பிரிட்டன் ஆதரவு வழங்கவில்லை. இந்தத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு இது பொருத்தமான நேரம் அல்ல என்று பிரிட்டன் கருதுகிறது. சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் ஊடாக இலங்கை நீண்டகால சமாதானம், சுபிட்சத்தை ஏற்படுத்த வேண்டுமென பிரிட்டன் விரும்புகிறது. ஆயினும் முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் மனிதாபிமான நிலைவரம் தொடர்பாக தொடர்ந்தும் நாம் கவலையடைத்துள்ளோம். இடம்பெயர்ந்த மக்களின் சுதந்திர நடமாட்டம் அவசியமானதாகும். இடம்பெயர்ந்த மக்களை மீளக்குயமர்த்தும் விரிவான நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டுமென்று ஐ.நா. அண்மையில் விடுத்திருக்கும் கோரிக்கைக்கு நாம் ஆதரவளிக்கிறோம். சாத்தியமான அளவுக்கு அந்த மக்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல இடமளிக்க வேண்டும். இதனைத் தாமதமின்றி நடை முறைப்படுத்துமாறு அரசாங்கத்தை நாம் வலியுறுத்துகிறோம்.


இதன் அடிப்படையில் இலங்கை தற்போதைய அரசியல் நிலைவரம் கடினமானதாக இருப்பதாக நாம் நம்புகிறோம். நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான நிலைமை கடினமானதாக உள்ளது. மனிதாபிமான நிலைவரம் கரிசனைக்குரியதாகத் தொடர்ந்து இருந்துவருகிறது. 180 நாட்களுக்குள் அகதிகள் முகாம்களிலிருந்து தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்வார்கள் என்று அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கிணங்க செயற்படுமாறு அரசாங்கத்தை நாம் வலியுறுத்துகிறோம் என்று ரிம்ஸ் கூறியிருக்கிறார்.


இலங்கை அரசாங்கத்துடனான கடன் விடய நிபந்தனைகளுக்கு சர்வதேச நாணய நிதியம் இணங்கி இருப்பதாக இந்த வாரம் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டொமினிக் ஸ்ரோர்ஸ்கான் தெரிவித்தார்.

மூலம்[தொகு]