ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் 6.2 ரிக்டர் நிலநடுக்கம்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, அக்டோபர் 24, 2009

ஆப்கானிஸ்தான்


கிழக்கு ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலைப் பகுதியில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியை ஒட்டி 6.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்டது. இந்த தகவலை அமெரிக்க புவியியல் சர்வே நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்து குஷ் மலைகள்

உள்ளூர் நேரப்படி காலை 00.21 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இரு நாடுகளினதும் தலைநகரங்களில் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூல் நகரின் வடகிழக்கில் 268 கி. மீட்டர் தூரத்தில் உள்ள மலைப் பகுதியிலும் 230 கி.மீ. தூரத்தில் உள்ள மிங்கோரா பகுதியிலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.


இந்நிலநடுக்கத்தினால் உயிரிழப்புக்கள், மற்றும் சேத விபரங்கள் உடனடியாக அறிவிக்கப்படவில்லை.


அல்ஜசீரா தொலைக்காட்சி செய்தியாளரின் தகவலின் படி, நிலநடுக்கம் தொடக்கத்தில் பல செக்கன்கள் நீடித்ததாகவும், அதனைத் தொடர்ந்து பலத்த பின்தாக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.


நிலநடுக்கத்தின் போது பெஷாவர், இஸ்லாமாபாத் லாகூர் ஆகிய நகரங்களில் கட்டடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். ஏதோ நடந்துவிட்டது என பயந்து வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்து இரவு நேரத்தில் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.


அக்டோபர் 2005 இல் வடமேற்கு பாகிஸ்தானில் இடம்பெற்ற 7.6 ரிக்டர் நிலநடுக்கத்தில் 75,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 1998 இல் 6.9 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 50,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

மூலம்