இந்தோனேசியாவின் தீவிரவாத மதக்குரு அபூ பாக்கர் பசீர் கைதானார்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஆகத்து 9, 2010

தீவிரவாதக் குற்றச்சாட்டுக்களின் பேரில் இந்தோனேசிய மதக்குரு அபூ பாக்கர் பசீர் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


ஆச்சே மாநிலத்தில் போராளிகளின் பயிற்சி முகாம் ஒன்றுடன் இவர் தொடர்பில் இருந்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி முகாம் கடந்த பெப்ரவரி மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.


71 வயதான பசீர் முன்னர் 2002 பாலி குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு இரண்டாண்டுகள் சிறைவாசம் இருந்தவர். பாலி குண்டு வெடிப்பின் போது 168 ஆத்திரேலியர்கள் உட்பட 202 பேர் கொல்லப்பட்டனர். 2006 ஆம் ஆண்டில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமல் இவர் விடுவிக்கப்பட்டார்.


அல்-கைதாவுடன் தொடர்புடைய ஜெமா இஸ்லாமியா என்ற இந்தோனேசியத் தீவிரவாதக் குழுவின் ஆன்மீகத் தலைவராக இவர் கருதப்படுகிறார். இக்குற்றச்சாட்டை அவர் எப்போது மறுத்தே வந்துள்ளார்.


மேற்கு ஜாவாவில் காவல்துறையினரால் கைதான பசீர் மீது இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இந்தோனேசியச் சட்டப்படி குற்றம் சுமத்தாமல் ஆகக்கூடியது ஏழு நாட்களுக்கு ஒருவரைக் காவலில் வைத்திருக்க முடியும்.

மூலம்[தொகு]