பர்மாவில் 48 ஆண்டுகளின் பின்னர் ஊடகத் தணிக்கை நீக்கம்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஆகத்து 20, 2012

பர்மாவில் ஊடகத்தணிக்கை இன்று திங்கட்கிழமை முதல் நீக்கப்படுவதாக அந்நாட்டின் தகவற்துறை அமைச்சு அறிவித்துள்ளது.


ஊடகவியலாளர்கள் இன்று முதல் தமது ஆக்கங்களை மேற்பார்வைக்காக தமக்கு அனுப்பத் தேவையில்லை என அரசு தெரிவித்துள்ளது.


கடந்த ஆண்டு மக்கள் அரசு அமைக்கப்பட்டதில் இருந்து அங்கு பல அரசியல் சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. "தணிக்கை முறை 1964, ஆகத்து 6 ஆம் நாள் அமுலுக்கு வந்தது. 48 ஆண்டுகள் இரண்டு வாரங்கள் கழித்து அது நீக்கப்படுகிறது," என அமைச்சு அதிகாரி டிண்டு சுவே என்பவர் தெரிவித்துள்ளார்.


ஆனாலும் திரைப்படங்கள் தொடர்ந்தும் தணிக்கைக்குள்ளாகும் என அமைச்சுப் பேச்சாளர் ஒருவர் ஏஎஃப்பி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


30,000 இற்கும் அதிகமான இணையத்தளங்கள் மீதான தடைகளும் இன்று முதல் நீக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து அரசியல் செய்திகள் தொடர்பான இணையத்தளங்களை எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் பயனர்கள் முதற்தடவையாகப் பார்வையிடலாம்.


மூலம்[தொகு]