உள்ளடக்கத்துக்குச் செல்

பர்மாவின் ராக்கைன் மாநிலத்தில் இனக்கலவரம், பலர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, அக்டோபர் 27, 2012

பர்மாவின் ராக்கைன் மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ராக்கைன் வாழ் பௌத்தர்களுக்கும், ரோகிஞ்சா முசுலிம்களுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் இனக்கலவரங்களில் குறைந்தது 64 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.


இரண்டு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், அங்கு இரவு நேரத்தில் கலவரங்கள் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.


மனித உரிமைக் கண்காணிப்பகம் செய்மதிப் படங்களை ஆதாரம் காட்டி எண்ணூறுக்கும் அதிகமான வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பான்மையானோர் முஸ்லிம்கள் என கண்காணிப்பகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.


பர்மாவில் அண்மைய இனக்கலவரங்களால் பல அழிவுகள் ஏற்பட்டுள்ளதை பர்மிய அரசுத்தலைவர் தெயின் செயின் ஒப்புக்கொண்டுள்ளார். "ரான்கைன் மாநிலத்தில் பல கிராமங்கள், நகரங்கள் பகுதியாகவோ முற்றாகவோ அழிக்கப்பட்டுள்ளன," தெயின் செயினின் பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.


அண்மைய இனக்கலவரம் எதனால் ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. பல முஸ்லிம்கள் எல்லையைக் கடந்து வங்காளதேசத்துக்குள் நுழையக் காத்திருப்பதாக வங்காளதேச அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேற்கு பர்மாவில் வாழும் ரோகிஞ்சா முசுலிம்கள் அண்டை நாடான வங்காளதேசத்திலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என பர்மிய அரசு கருதுகிறது. பர்மாவில் இவர்கள் குடியுரிமை அற்றவர்கள். இவர்களை ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகிவரும் மதம் மற்றும் மொழிச் சிறுபான்மை இனக்குழு என்று ஐநா கருதுகிறது.


மூலம்

[தொகு]