உள்ளடக்கத்துக்குச் செல்

கெச்சின் போராளிகளின் தளங்கள் மீது பர்மிய இராணுவம் தாக்குதல்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், சனவரி 2, 2013

பர்மாவின் வடக்கு மாநிலமான கெச்சினில் அமைந்துள்ள போராளிகள் தளங்கள் மீது பர்மிய இராணுவ வானூர்திகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


சுதந்திர பர்மியக் குழு என்ற மனித நலம் சார்ந்த அமைப்பு வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் உலங்கு வானூர்திகள், மற்றும் போர் விமானங்கள் போராளிகள் மீது தாக்குதல் நடத்துவது காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இராணுவத்தினரின் தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் எதுவும் தமக்கு அறிவிக்கப்படவில்லை என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


கெச்சின் போராளிகள் மீதான தாக்குதல்கள் 17 ஆண்டுகள் போர் நிறுத்தத்தின் பின்னர் 2011 ஆம் ஆண்டில் மீல ஆரம்பித்திருந்தது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் போர் விமானங்கள், மற்றும் உலங்கு வானூர்திகளின் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதை நேரில் கண்டவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


மோதல் இடம்பெறும் பகுதிகளில் குடியிருந்த 75,000 இற்கும் அதிகமான பொதுமக்கள் பெரும்பாலானோர் தமது இருப்பிடங்களை விட்டு கெச்சினின் வெறு பகுதிகளுக்கும், எல்லையைத் தாண்டி சீனாவுக்குள்ளும் ஏற்கனவே வெளியேறியுள்ளனர்.


தாக்குதல்கள் குறித்து சனாதிபதி அலுவலகப் பேச்சாளர் கூறுகையில், நிலைமை அங்கு மிகவும் சிக்கலானது, அங்குள்ள படையினருக்குத் தேவையான இராணுவ உதவிகளைக் கொண்டு செல்வதற்கே வானூர்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றார்.


போராளிகளின் தலைமையகம் அமைந்திருக்கும் லாய்சா என்ற இடத்தின் மீது முழு அளவிலான தாக்குதல் ஒன்றை நடத்த இராணுவம் திட்டமிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


மூலம்

[தொகு]