பாக்கித்தானில் சியா முஸ்லிம்கள் மீது குண்டுத் தாக்குதல், 81 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, பெப்பிரவரி 17, 2013

பாக்கித்தானின் பலுச்சித்தான் மாகாணத் தலைநகர் குவெட்டாவில் சந்தைப் பகுதி ஒன்றில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 81 பேர் கொல்லப்பட்டனர். 178 பேர் காயமடைந்தனர்.


ஹசாரா எனப்படும் சியா முஸ்லிம்கள் வாழும் இப்பகுதியில் இடம்பெற்ற இத்தாக்குதல் சுன்னி முஸ்லிகளால் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவிப்பதற்காக நகரில் இன்று முழுநேரக் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் 100,000 ரூபாய் நட்ட ஈட்டுத் தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.


மக்கள் நெருக்கடி மிகுந்த சந்தைப் பகுதியில் நேற்று மாலை 6:00 மணிக்கு இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இப்பகுதியில் பலசரக்குக் கடைகள், மரக்கறிச் சந்தை, பாடசாலை, மற்றும் கணினி மையம் போன்றவை அமைந்துள்ளன.


பாக்கித்தானில் தடை செய்யப்பட்டுள்ள லஷ்கார்-இ-ஜாங்குவி என்ற சுன்னி அமைப்பு தாங்களே இத்தாக்குதலை நடத்தியதாக அறிவித்துள்ளது. கடந்த மாதத்திலும் இவ்வமைப்பு ஹசாராக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.


மங்கோலிய, மற்றும் மத்திய ஆசிய வம்சாவழியினரான ஹசாரா மக்கள் பெருமளவு மத்திய ஆப்கானித்தானில் பாமியன் மாகாணத்தில் வசிப்பவர்கள். ஆப்கானித்தானை 13ம் நூற்றாண்டில் கைப்பற்றிய மங்கோலியாவின் செங்கிஸ் கான் மற்றும் அவனது படையினரின் வழித்தோன்றல்கள் இவர்கள் என நம்பப்படுகிறது. ஆப்கானித்தானில் இருந்து இடம்பெயர்ந்து குறைந்தது 600,000 பேர் தற்போது பாக்கித்தானின் குவெட்டா நகரில் வசிக்கின்றனர்.


மூலம்[தொகு]