ஜெனீவாவில் 'மோதல் தவிர்ப்பு வலயம்' ஈழப் போர்க்குற்ற ஆவணப் படம் திரையிடப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மார்ச்சு 2, 2013

இலங்கையில் மே 2009 இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரி இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய இராச்சியத்தின் 'சேனல் 4' ஊடகம் தனது இரண்டாவது ஆவணப் படத்தை நேற்று ஜெனீவாவின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் திரையிட்டது.


“மோதல் தவிர்ப்பு வலயம்” (No fire zone) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஆவணப் படத்தில் பாதுகாப்பு வலயத்தில் நடந்ததாகக் கூறப்படும் குற்றங்கள், சிறுவர்கள் இந்தப் போரினால் எவ்வளவு பாதிக்கப்பட்டார்கள் என்பது போன்ற பல விடயங்கள் காண்பிக்கப்பட்டன. பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பாலியல் குற்றங்களும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கொலை குறித்த ஆவணங்களும் வெளியிடப்பட்டன.


இந்தப் படத்தை அங்கு திரையிட அனுமதிக்கக் கூடாது என இலங்கை அரசு கேட்டுக் கொண்டிருந்த போதிலும், திரைப்படம் பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளின் ஆதரவில் ஐநாவின் 23 ஆம் இலக்க அறையில் காண்பிக்கப்பட்டது. ஐநா மனித உரிமைகள் சபை உறுப்பு நாடுகளின் இராசதந்திரிகள் உட்பட நூற்றுக் கணக்கானோர் இதனைப் பார்வையிட்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


பாலச்சந்திரன் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே கொல்லப்பட்டார் என்பதற்கான ஆதாரப் புகைப்படங்கள் ஆவணப் படத்தில் வழங்கப்பட்டுள்ளன.


திரைப்பட வெளியீட்டு விழாவில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், "சிறிலங்காவில் போரின் இறுதிக் கட்டத்தில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும்" எனக் கூறினார். மண்டபத்துக்கு வந்திருந்த ஜெனிவாவுக்கான இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க, இந்தப் படம் புனையப்பட்ட காட்சிகளை காண்பித்தது என்று கூறியிருக்கிறார்.


மூலம்[தொகு]