கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் தமிழ் விக்கிப்பீடியா, இதழியல் பயிலரங்கம்
செவ்வாய், மார்ச்சு 5, 2013
இதழியல் துறையில் பணிவாய்ப்பு குறித்தும், தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் குறித்தும் பயிலரங்கு, மார்ச் 14, 2013 நாளில் கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில், நடைபெற உள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் கல்வியில் பின்தங்கியுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளது. இங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கான பணி வாய்ப்பு மிகவும் குறைவு.
கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில், கலையியல் புலத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மற்றம் ஆய்வு நிலை மாணவர்களுக்கு உலகளாவிய கட்டற்ற கலைக் களஞ்சியமான விக்கிப்பீடியா தொகுத்தல், இதழியல் பணி சார்ந்த வாய்ப்புக்கள் குறித்த பயிற்சி , பயிலரங்கம் நடத்தப்படவுள்ளது.
இப்பயிலரங்கில், பெரியார் பல்கலைக் கழக இதழியல்துறை பேராசிரியர் மா.தமிழ்ப்பரிதி, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் மற்றும் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் ஆகிய பொருண்மைகளில் சிறப்புரை , செய்முறைப் பயிற்சி அளிக்கவுள்ளார்.
எழுத்தாளர் ப.சரவணன், பத்திரிகையாளர் ஆதி வெங்கடேசன், பத்திரிகையாளர் அமுதன் ஆகியோர் இதழியல் பயிற்சியினை அளிக்கவுள்ளனர்.
நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி முதல்வர் தலைமை தாங்குகிறார். பேராசிரியர் முனைவர் சிவப்பிரியா மற்றும் பேராசிரியர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்சியை எடூஎ மீடியா அமைப்பு வடிவமைத்து உள்ளது. கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஆர்காட் தொண்டு நிறுவனம் நிகழ்ச்சிக்கான உதவியைச் செய்துள்ளது.