நைஜரில் தற்கொலைத் தாக்குதல், படையினர் உட்படப் பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மே 24, 2013

மேற்காப்பிரிக்க நாடான நைஜரில் அகாடசு நகரில் உள்ள இராணுவ முகாம் ஒன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குள்ளானதில் 18 இராணுவத்தினர் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியோரில் 4 பேர் கொல்லப்பட்டனர்.


சோமையர் என்ற நகரில் பிரான்சினால் நடத்தப்படும் யுரேனியச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற மற்றும் ஒரு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார், மேலும் 14 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதல்களை போராளிகளின் தலைவர் மொக்தார் பெல்மொக்தார் என்பவரே நடத்தியதாகக் கூறப்பட்டாலும், அது உறுதிப்படுத்தப்படவில்லை.


இன்று அதிகாலை 05:00 மணிக்கு மக்கள் காலை நேரத் தொழுகையை ஆரம்பித்த சிறிது நேரத்தில் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இராணுவ முகாமினுள் குண்டுகள் நிரப்பிய மோட்டார் வாகனம் ஒன்று செலுத்தப்பட்டு முதலாவது தாக்குதல் நடத்தப்பட்டதாக நைஜரின் பாதுகாப்பு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார். இரண்டாவது தாக்குதலில் சுரங்கத் தொழிலாளர்கள் குழுமியிருந்த இடத்துக்கருகாமையில் வாகனம் ஒன்று வெடிக்க வைக்கப்பட்டது.


ஜிகாட் இயக்கமான முஜாவோ என்ற குழு தாமே இத்தாக்குதல்களை நடத்தியதாக அறிவித்துள்ளது. நைஜரில் இசுலாமியர்களின் எதிரிகளையே தாம் தாக்கியதாக அக்குழுவின் பேச்சாளர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு அல்-கைதாவில் இருந்து பிரிந்த மொக்தார் பெல்மொக்தார் புதிய ஜிகாட் அமைப்பை நிறுவினார். முஜாவோ அமைப்பு (மேற்கு ஆப்பிரிக்காவின் ஐக்கியம் மற்றும் ஜிகாட் இயக்கம்) மாலியின் வடக்கே தீவிரமாக இயங்கி வருகிறது.


நைஜரில் உள்ள பிரெஞ்சு வளங்களைத் தமது அரசு பாதுகாக்க உறுதி பூண்டுள்ளதாக பிரெஞ்சு அரசுத்தலைவர் பிரான்சுவா ஒலாண்டே அறிவித்துள்ளார். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் தாம் நைஜர் அரசுக்கு தேவையான உதவி வழங்குவோம் என அவர் கூறினார்.


மூலம்[தொகு]