சேலம் சுழற் சங்கத்தில் விக்கிப்பீடியா தொகுத்தல், தமிழ்க்கணினிப் பயிற்சி

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, செப்டெம்பர் 20, 2013

சேலம் சுழற்சங்கத்தில் விக்கிப்பீடியா குறித்து உரையாற்றும் பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி

சுழற் சங்க (Rotary Club) உறுப்பினர்களுக்குத் தமிழ்க்கணினி விழிப்பூட்டுதல், தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகளில் ஈடுபாட்டை ஏற்படுத்துதல்,தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகளில் செய்முறை விளக்கம் அளித்தல் என்னும் நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு, சேலத்தில், சுழற்சங்கத்தின் சார்பில் சுழற் சங்க அரங்கம், 1-சி, சகாதேவபுரம், சேலம்-7 இல், இன்று 20.09.2013, வெள்ளிக்கிழமை, மாலை 6.00 மணி அளவில் விக்கிப்பீடியா தொகுத்தல், தமிழ்க்கணினிப் பயிற்சி நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சேலம், பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறைப் பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி விக்கிப்பீடியா தொகுத்தல் மற்றும் தமிழ்க்கணினியின் தேவை குறித்து, தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் ,தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் என்பன குறித்துச் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பினை சேலம் சுழற் சங்கம் மேற்கொண்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கலாம். தொடர்பு எண்: 0427-2419958.