மாலைதீவுகளின் அரசுத்தலைவராக அப்துல்லா யமீன் தேர்ந்தெடுக்கப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, நவம்பர் 17, 2013

மாலைதீவுகளில் நேற்று நடைபெற்று முடிந்த அரசுத்தலைவர் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் அப்துல்லா யமீன் வெற்றி பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அவர் தலைநகர் மாலேயில் புதிய அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.


நேற்று இடம்பெற்ற இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் யமீன் 51.3% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நவம்பர் 9 இல் நடைபெற்ற முதல்கட்ட வாக்கெடுப்பில் முன்னாள் அரசுத்தலைவர் முகமது நசீது 48.6% வாக்குகள் பெற்று முன்னணியில் இருந்தார். ஆனால் வெற்றி பெறத் தேவையான 50% வாக்குகளை அவர் பெறத் தவறியிருந்தார்.


யமீனுடன் போட்டியிட்ட முன்னாள் அதிபர் முகம்மது நசீத் தோல்வியை ஏற்றுக் கொண்டார். புதிய தலைவருக்கு இந்தியா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது. இரண்டு ஆண்டுகள் நாட்டில் நிலவி வந்த அரசியல் கொந்தளிப்பு நிலைக்கு இத்தேர்தல் முடிவுகள் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என பெரும்பாலான மாலைதீவு மக்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதர்களும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.


அப்துல்லா யமீன் 30 ஆண்டு காலம் அரசுத்தலைவராகப் பதவியில் இருந்த முன்னாள் அரசுத்தலைவர் அப்துல் கையூமின் உடன்பிறவா சகோதரர் ஆவார்.


நாட்டில் அரசியல் திர நிலையைக் கொண்டு வருவதே தமது முதல் பணியாகும் என அப்துல்லா யமீன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். திரு. நசீத் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், "தோல்வியை நான் ஏற்றுக் கொள்கிறேன். நாம் ஒரு சிறிய வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறோம். மக்களாட்சி முறையில் இது ஏற்றுக் கொள்ளக்கூடியதே," என்றார்.


மாலைதீவில் 2008 ஆம் ஆண்டு நடந்த முதலாவது சனநாயகத் தேர்தலில், முகமது நசீது அரசுத்தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டார். 2012 பெப்ரவரியில் நாட்டில் இடம்பெற்ற குழப்ப நிலையை அடுத்து இவர் பதவியில் இருந்து விலகினார்.


மூலம்[தொகு]