பாக்கித்தானில் பள்ளி மாணவனின் தற்கொலைக் குண்டுவெடிப்பில் 31 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், பெப்பிரவரி 10, 2011

பாக்கித்தானின் வட-மேற்குப் பகுதியில் இராணுவ அணிவகுப்பு நடைபெறும் திடல் ஒன்றில் பள்ளி மாணவன் ஒருவன் தற்கொலைக் குண்டு ஒன்றை வெடிக்க வைத்ததில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டனர்.


இத்தாக்குதலைத் தாமே நடத்தியதாக தலிபான் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். பாக்கித்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானி இத்தாக்குதலைக் கண்டித்துள்ளார்.


மார்டான் நகரில் காலை 0800 மணிக்கு இராணுவ அணிவகுப்பு நடைபெறும் திடலில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இப்பகுதியில் உள்ள அசீஸ் பட்டி கல்லூரியின் சீருடையை தற்கொலைக் குண்டுதாரி அணிந்திருந்ததாக மார்டான் நகர காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.


சில நாட்களுக்கு முன்னர் மார்டான் நகருக்கு அருகே மொஹ்மாண்ட் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை இராணுவத்தினர் ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்புத் தேடி இடம் பெயர்ந்திருந்தனர். ஆப்கானித்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மொஹ்மாண்ட் பகுதி தலிபான்களினதும், அல்-கைதா தீவிரவாதிகளினதும் முக்கிய தளமாகக் கருதப்பட்டு வந்தது.


இதே இடத்தில் 2006ஆம் ஆண்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 20 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.


மூலம்[தொகு]