உள்ளடக்கத்துக்குச் செல்

கடாபியின் முன்னாள் புலனாய்வுத் தலைவர் மூரித்தானியாவில் கைது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மார்ச்சு 18, 2012

லிபியாவின் முன்னாள் தலைவர் முவாம்மர் கடாஃபியின் புலனாய்வுத்துறைத் தலைவராகப் பணியாற்றிய அப்துல்லா அல்-செனூசி மூரித்தானியாவில் விமானம் மூலம் வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டார். இவரைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு லிபிய இடைக்கால அரசு மூரித்தானியாவைக் கேட்டுக் கொண்டுள்ளது.


மனித உரிமை மீறல்களுக்காக பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றமும் இவருக்கு கடந்த ஆண்டு சூன் மாதத்தில் கைதாணை பிறப்பித்திருந்தது. அத்துடன் 1989 ஆம் ஆண்டில் தமது நாட்டு விமானம் ஒன்றில் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாக பிரான்சும் இவருக்குக் கைதாணை பிறப்பித்திருந்தது. இத்தாக்குதலில் 170 பயணிகள் உயிரிழந்தனர். 1996 ஆம் ஆண்டில் லிபிய சிறைச்சாலை ஒன்றில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டமையிலும் இவருக்குத் தொடர்புள்ளது எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


எனினும், இவரை நாடு கடத்தும் முன்பாகத் தமது நாடும் இவர் மீது விசாரணைகளை மேற்கொள்ளும் என மூரித்தானியா அறிவித்துள்ளது. மொரோக்கோவில் இருந்து போலிக் கடவுச்சீட்டு மூலம் மூரித்தானியா தலைநகர் நுவாக்சொட்டில் நுழைய முயன்ற போதே செனூசி கைது செய்யப்பட்டார். ஆனாலும், இவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக மூரித்தானியா இது வரையில் எவ்வித சான்றுகளையும் அறிவிக்கவில்லை.


63 வயதாகும் செனூசி கடாபியின் ஆட்சி ஆட்டம் கண்டபோது நாட்டை விட்டுத் தப்பி ஓடினார்.


மூலம்

[தொகு]