உள்ளடக்கத்துக்குச் செல்

பர்மாவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடைத்தேர்தல்களில் ஆங் சான் சூச்சி பங்கேற்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஏப்பிரல் 1, 2012

பர்மாவில் இன்று நடைபெற்ற இடைத்தேர்தல்களில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூச்சி அம்மையார் 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாகப் போட்டியிடுகிறார். சூச்சி அம்மையாரின் மக்களாட்சிக்கான தேசிய முன்னணி (NLD) கட்சி அனைத்து 45 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.


அதிகாரபூர்வமற்ற முடிவுகளின் படி ஆங் சான் சூச்சி தனது தேர்தல் தொகுதியில் வெற்றி பெறுகிறார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.


இராணுவத்தினரின் பின்னணியுடன் கூடிய கட்சி பெரும்பான்மையாக ஆட்சியில் இருந்தாலும், பர்மாவில் அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளுவதற்கு இத்தேர்தல்கள் ஒரு முக்கிய படிக்கல்லாகப் பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும், பன்னாட்டுக் கண்காணிப்பாளர்களுக்கும் அங்கு முதற்தடவையாக மிகப் பரந்த அளவில் அணுக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்கெடுப்பு அங்கு சுமூகமாக நடைபெறும் பட்சத்தில் பொருளாதாரத் தடையைத் தளர்த்தவிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே அறிவித்திருக்கிறது.


தலைநகரில் சில வாக்களிப்பு நிலையங்களில் முறைகேடுகள் இடம்பெற்றதாக என்எல்டி கட்சி தெரிவித்துள்ளது. மக்களாட்சிக்கான தேசிய முன்னணி கட்சி 1990 இல் இடம்பெற்ற தேர்தல்களில் அமோக வெற்றி பெற்றிருந்தது. ஆனாலும், அவரது கட்சி ஆட்சியமைக்க இராணுவ அரசால் அனுமதிக்கப்படவில்லை. ஆங் சான் சூச்சி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]